இணையவழி ஊழியர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத் தரநிலைகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தொழில்துறை நடத்தை விதிமுறை குறித்துக் கருத்துரைக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்துரைக்கலாம்.
பரிந்துரையின்கீழ், தனியார் வாடகை கார் சேவை, விநியோக சேவை வழங்கும் தளங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு, வாடிக்கையாளரை ஏற்றிச்செல்லுதல், உணவு, பொருள்களை விநியோகித்தல் தொடர்பில் இனி காலக்கெடு விதிக்க இயலாது.
இணையவழி ஊழியர்களைக் கொண்டுள்ள தளங்கள் மோசமான வானிலை நிலவும் நேரங்களில் ஊழியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நினைவுபடுத்த வேண்டியதும் அதற்காக அவர்களைத் தண்டிக்கக்கூடாது என்பதும் கட்டாயம்.
‘கிராப்’, ‘ஃபுட்பாண்டா’, ‘லாலாமூவ்’ போன்ற தளங்களில் இணைந்துள்ள விநியோக சேவை ஊழியர்கள், தனியார் வாடகை கார் மற்று டாக்சி ஓட்டுநர்கள் இணையவழி ஊழியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அத்தகைய ஊழியர்கள் தங்கள் சொந்த உடல்நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டியது தொடர்பான பொறுப்புகளையும் நகல் பரிந்துரை முன்னுரைத்துள்ளது. இணையவழி ஊழியர்கள் ஊக்கத்தொகைக்காகப் பாதுகாப்பைப் பணயம் வைக்கக்கூடாது என்று அது வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களிடம் கருத்து திரட்டிய பிறகு, விதிமுறை வரையறுக்கப்படும். பின்னர் அது அரசிதழில் வெளியிடப்படும்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிமுறையின் நகலை, வேலையிடப் பாதுகாப்பு மன்றத்தின் இணையத்தளத்தில் காணலாம்.