புதிய இளையர் சாசனம் சிங்கப்பூரின் எதிர்காலத்தை இணைந்து வடிவமைப்பதற்கான கூட்டுக் கடப்பாட்டின் தொடக்கம் என்று பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
இளையர்கள் காணவிரும்பும் சமூகத்தைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்ட மக்கள் கழகத்தின் புதிய இளையர் சாசனத்தைப் பிரதமர் வோங் சனிக்கிழமை (மார்ச் 1) அறிமுகப்படுத்தினார்.
அதற்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளையர்கள் கலந்துகொண்டனர்.
“இந்த இளையர் சாசனம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் விரும்பும் சமூகத்தை வடிவமைப்பதற்கான ஒரு வரைபடம். இது செயல்திறனுடன் திகழ்வதற்கான அழைப்பு,” என்று குறிப்பிட்டார் திரு வோங்.
நாட்டின் கட்டமைப்பிற்கான அடுத்த நிலையில் சமூகத்தை வலுவாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருக்கும் பணியில் சிங்கப்பூரர்களை எவ்வாறு ஈடுபடுத்தலாம், எவ்வகையில் ஒன்றிணைந்து பணியாற்றலாம் என்பதன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முன்னேறும் சிங்கப்பூர் திட்டம் குறித்து அவர் நினைவுகூர்ந்தார்.
“அத்திட்டம் வாயிலாக நாட்டிற்கான தங்கள் விருப்பம், தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்ள இளம் சிங்கப்பூரர்கள் பலர் முன்வந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். சிங்கப்பூரின் எதிர்கால வடிவமைப்பில் ஈடுபட இளையர்களில் பலர் விருப்பம் தெரிவித்திருந்தீர்கள்.
“எனவே முக்கியமான பிரச்சினைகள், தங்களின் நாட்டம், கனவு, தங்கள் இலட்சியங்களை நனவாக்க அவர்கள் எவ்வகையில் உதவலாம் என்பதன் தொடர்பில் மேலும் வெளிப்படையான கலந்துரையாடல்களில் கூடுதலான இளம் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த மக்கள் கழக இளையர் அணி எண்ணியது,” என்று சாசன உருவாக்கத்தின் பின்னணியை விவரித்தார் திரு வோங்.
ஏறத்தாழ 100,000 கருத்துகள், ஆலோசனைகளைப் பெறும் இலக்குடன் இளையர் சாசன உருவாக்கத்திற்கான பணி 2023 நவம்பரில் தொடங்கியது. எனினும் எதிர்பார்ப்பையும் கடந்து, 127,000 கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மனநலன், இன சமய நல்லிணக்கம், சுற்றுப்புறம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று முக்கியக் கூறுகளில் சாசனம் கவனம் செலுத்துகிறது என்றும் இவை சார்ந்த அக்கறைகளே இளையர் சாசனத்திற்கான கலந்துரையாடல்களில் பரவலாக எதிரொலித்தன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இளையர்களால் இளையர்களுக்காக…
இளையர் சாசனம், 18 கூற்றுகளில் இளையர் நிலைநிறுத்தி வாழ உறுதியளிக்கும் விழுமியங்களை விவரிக்கிறது.
ஒவ்வோர் இளையரின் குரலும் செவிமடுக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாடெங்கும் உள்ள மக்கள் கழகத்தின் 95 இளையர் அணிகள் மூலமாகக் குழு விவாதங்கள், கலந்துரையாடல்கள், சமூக நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு வழிகளில் இளையர்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் திரட்டப்பட்டன.
இந்த சாசனம் இளையர்களுக்காக இளையர்களால் எழுதப்பட்டது என்று சுட்டிய பிரதமர், இதன்மூலம் வெளிப்பட்ட இளையர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்பும் வருங்காலத்தில் கூடுதலான இளையர்களுடன் இணைந்து, மேலும் விரிவான இளையர் திட்டத்தை உருவாக்க தமக்கும் தம் குழுவிற்கும் ஊக்கம் அளிப்பதாகச் சொன்னார்.
சாசன அறிமுக நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, நேரத்தையும் திறன்களையும் கொண்டு சமூகத்திற்காகச் செயலாற்றும் இலக்குடன், இந்த ஆண்டு மக்கள் கழக இளையர் அணி தொண்டு செய்வதற்காக ஒரு மில்லியன் மணி நேரத்தை அர்ப்பணிக்க உறுதியளிக்கிறது எனும் அறிவிப்பு வெளியானது. இந்த இயக்கத்தின் அங்கமாகத் திகழ இளையர்களுக்கு அறைகூவல் விடுத்தார் திரு வோங்.
மேலும், எஸ்ஜி60யை முன்னிட்டு மக்கள் கழகம் அறிமுகப்படுத்தும் ‘எஸ்ஜி60 பிஏ ஈடுபாட்டு மானியம்’ குறித்த அறிவிப்பும் வெளியானது.
இது, சிங்கப்பூரர்களிடையே பிணைப்புகளை உருவாக்குதல், சக சிங்கப்பூரர்கள்மீது அக்கறை கொள்ளுதல், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குதல் உள்ளிட்ட முயற்சிகளைக் களமிறக்குவதில் அடித்தள அமைப்புகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் கைகொடுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசாங்கம் அதன் பங்கைச் செய்யும் என உறுதியளித்த அவர், “அரசாங்கம் அதைத் தனியாகச் செய்ய முடியாது. உங்கள் ஆதரவும் தேவை. சிங்கப்பூர்க் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு,” என்று இளையர்களிடம் வலியுறுத்தினார்.