சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரில் வாழும் மக்களுக்கான பொதுப் பாதுகாப்பை மேல்நிலைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது சிங்கப்பூர் காவல்துறை.
இதன்படி, பொதுப் பாதுகாப்புத் தளபத்தியத்தின் உத்திபூர்வ இடம் சிறப்பாகச் செயல்பட தேவையான வளங்கள் பெறுவதை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) காலை செயல்முறைக்குக் கொண்டு வந்தது காவல்துறை.
சாத்தியமான அச்சுறுத்தலைத் தடுக்கவும் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலப்பரப்பை மேம்படுத்தவும் இச்செயல்திட்டம் உதவி புரியும் என்று காவல்துறை செய்தியறிக்கை சுட்டியது.
பொதுப் பாதுகாப்பை காக்க நடப்புக்கு வரும் முக்கிய அம்சங்கள்
பிரபல சுற்றுலாத் தளங்கள் உட்பட இதர பொது இடங்களில் நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களைப் பொதுப் பாதுகாப்புத் தளபத்திய அதிகாரிகள் மேலும் வலுப்படுத்துவர்.
பொதுப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க முயலும் சம்பவங்களைத் தடுக்கும் இலக்குடன் இன்னும் வெளிப்படையான, புலப்படும் வகையிலான சுற்றுக்காவலை அதிகாரிகள் மேற்கொள்வர். குடியிருப்பாளர்கள், சுற்றுப்பயணிகள் மத்தியில் பாதுகாப்பு சார்ந்த உணர்வைப் பேணுதல் இதன் நோக்கம்.
நாட்டின் பாதுகாப்பை இன்னும் உறுதிப்படுத்தும் இம்முயற்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு உதவிக்கரம் நீட்ட ஆளில்லா வானூர்திகளும் இம்முறை இதுவரை இல்லாத அளவில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
குறிப்பாக, ஆளில்லா வானுர்திகளை இயக்குவதுடன், அத்தகைய கருவிகளைக் கொண்டு பாதுகாப்புக்கு எதிரான அசம்பாவிதங்களை நிகழ்த்த முற்பட்டால், அந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அக்கருவிகளைச் செயலிழக்கச் செய்யும் திறன்களும் இம்முறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய மேம்பட்ட அம்சங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையில் இடம்பிடித்திருப்பது இதுவே முதல்முறை என்று காவல்துறை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையில் நிகழும் சம்பவத்திற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுத்து, அத்துடன் முறையான ஒப்புதல் இல்லாத ஆளில்லா வானூர்திகளின் இயக்கத்தைத் தடைசெய்து பாதுகாப்பை மீட்டெடுக்க, உத்திபூர்வ இடத்துக்கான செயலாக்க அதிகாரிகளுக்கு ஆளில்லா வானுர்திகளைச் செயலிழக்கச் செய்யும் கருவியும் (handheld drone jamming system) அளிக்கப்படவுள்ளது.
மேலும், சுற்றுக்காவலை இன்னும் வலுப்படுத்தவும் உத்திபூர்வ இடங்களாகக் கருதப்படும் இடங்கள் எப்படிப்பட்ட நிலப்பரப்பில் இருந்தாலும் அவற்றை அதிகாரிகள் எளிதில் அடையும் வகையிலான புதிய வாகனங்களும் இந்தத் திட்டத்தில் அணிவகுத்துள்ளன.
பொது இடங்களில் பாதுக்காப்புக்கு தீங்கு விளைவிக்கும் சம்பவங்கள் நடைபெற்றால், இப்புதிய திட்டத்தின் வாயிலாக எப்படி அதிகாரிகள் துரிதமாகச் செயல்படுவர் என்பதை விளக்கும் வகையில் பாவனைச் செயல்முறைகள் நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டன.
இதற்கிடையே, இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் பொதுப் பாதுகாப்புத் தளபத்தியத்தின் தலைமைத் தளபதியான காவல்துறை உதவி ஆணையர் (ஏஎஸ்பி) விக்டர் ஹோ.
“பொதுப் பாதுகாப்பு சம்பவங்களுக்குத் தக்க பதிலடி அளிக்கும் வகையில் சிங்கப்பூர் காவல்துறையின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும் சமூகத்தைப் பாதுகாக்க விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுவதும் காவல்துறையின் குறிக்கோள்,” என்றார் ஏஎஸ்பி ஹோ.
தொடர்ந்து பேசிய அவர், “ஆளில்லா வானூர்தி சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பரந்த அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்க இயலும். இது அனைவருக்கும் பாதுகாப்பான சிங்கப்பூரை உறுதி செய்கிறது,” என்றும் கூறினார்.