பாசிர் ரிஸ்ஸில் நுரை நிறைந்த நீரில் ஓர் உடும்பு தென்படும் காணொளி, இணையவாசிகள் மத்தியில் கவலையைத் தூண்டியதுடன், மாசுபாடு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுங்கை அப்பி அப்பி ஆற்றில் காணப்பட்ட அந்த ஊர்வனத்தின் காணொளி, ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 5) ‘சிங்கப்பூர் வனவிலங்கு காட்சிகள்’ என்ற ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்டது.
“வியாழக்கிழமை (ஜூலை 9) காலை, பாசிர் ரிஸ்ஸில் உள்ள சுங்கை அப்பி அப்பி ஆற்றில் காணப்பட்ட சோப்புக் கழிவு நீரில் ஓர் உடும்பு ‘குளிக்கும்’ காட்சியை என் நண்பர் கண்டார்,” என்று அந்த இணையவாசி கூறினார்.
அப்பகுதியில் இது நடப்பது முதல் முறையல்ல என்றும் கூறிய அந்த இணையவாசி, இவ்விவகாரத்தை விசாரிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
நுரையின் தோற்றம் குறித்தும், அது வனவிலங்குகளுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்தும் விசாரிக்கக் கோரி இணையவாசிகள் பலர் கேட்டுக்கொண்டனர்.
“அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதை அதிகாரிகள் பகிர்ந்துகொள்வார்கள் என நம்புகிறேன்,” என்று மற்றோர் இணையவாசி கருத்துத் தெரிவித்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் பதில்
அந்தக் காணொளி குறித்து எச்சரிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைக்காகத் தனது அதிகாரிகளை அனுப்பியதாக ஏஷியாஒன் செய்தி நிறுவனத்திடம் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
சுங்கை அப்பி அப்பி பகுதியிலோ அல்லது அருகிலுள்ள வடிகால்களிலோ அசாதாரணமான வெளியேற்றம் எதுவும் காணப்படவில்லை என்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நீர் மாசுபாடு குறித்த எந்த விவரங்களும் இல்லை என்றும் வாரியம் தெரிவித்தது.
“அருகிலுள்ள குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகளின் நிர்வாகங்கள், வசிப்போர் குழுக்கள், தங்களது செயல்பாடுகளின் விளைவாக சோப்பு நீர் அல்லது பிற மாசுபடுத்தும் பொருள்கள் பொது வடிகால்களில் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நினைவூட்டப்படுகிறது,” என்று வாரியம் மேலும் கூறியது.

