சிங்கப்பூர், இஸ்ரேலிய அதிகாரிகள் நடத்திய சந்திப்பு குறித்து திரு ஃபட்லி ஃபோவ்ஸி எழுப்பிய கேள்விகள், இஸ்ரேல் விவகாரத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் ஒழுங்கின்றி நடந்துகொண்டு, திடமான போக்கைப் பின்பற்றவில்லை என்று மலாய், முஸ்லிம் சமூகத்துக்குச் சித்திரிக்கும் நோக்கம் கொண்டவை என்று மூத்த அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
ஃபட்லியின் கருத்துகளை சாடிய அமைச்சர்
சிங்கப்பூர் அரசாங்கம் பிற நாட்டு அரசாங்கங்களை எவ்வாறு தொடர்புகொள்ளவேண்டும் என்பது குறித்து பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஃபட்லி அர்த்தமற்ற கருத்துகளை முன்வைத்ததாக திரு சண்முகம் புதன்கிழமை (நவம்பர் 4) நாடாளுமன்றத்தில் சொன்னார்.
“இந்தக் கேள்வியும் அதற்கான விளக்கமும் இன, சமய அடிப்படையில் நமது அனைத்துலக நாட்டுத் தொடர்புகளைப் பார்க்க மக்களைத் தூண்டுவதைத்தான் குறிக்கின்றன. இது முற்றிலும் தவறாகும்,” என்று திரு சண்முகம் எடுத்துரைத்தார்.
மறுப்பு தெரிவித்த ஃபட்லி
அதை திரு ஃபட்லி மறுத்தார். தமது கேள்வி இன, சமய அடிப்படையில் எழுப்பப்பட்டது அல்ல என்றார் அவர்.
“இது, அனைத்துலகச் சட்டத்திற்குக் கொண்டுள்ள கடப்பாட்டின்படி சிங்கப்பூர் எவ்வாறு தனது கடமைகளைத் தொடர்ந்து ஆற்றலாம் என்பது பற்றியதாகும்,” என்று திரு ஃபட்லி பதிலளித்தார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு ஃபட்லி, சிங்கப்பூர் உள்துறை அமைச்சுடன் இஸ்ரேலியப் பேராளர்க் குழு சந்திப்பு நடத்தியது குறித்து கடந்த அக்டோபர் மாத நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கக் கோரியிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய திரு ஃபட்லியின் நோக்கத்தை திரு சண்முகம் சாடினார்.
‘இரு வெவ்வேறு தரப்புகளுக்கு மாறுபட்ட சித்திரிப்பு’
திரு ஃபட்லி மக்களிடையே இரு வெவ்வேறு தரப்புகளுக்கு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குவதாக அமைச்சர் சண்முகம் சொன்னார். ஒன்று, பாட்டாளிக் கட்சி தேசிய அக்கறைகளில் கவனம் செலுத்துவதாகப் பொதுமக்களுக்குக் சித்திரிப்பது; மற்றொன்று, இஸ்ரேலிடையே அரசாங்கம் கண்டிப்பாக நடந்துகொள்ளவில்லை என்று மலாய், முஸ்லிம் சமூகத்துக்குச் சித்திரிப்பது என்று தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம் கூறினார்.
மேற்குக் கரையில் உள்ள ஆக்கிரமிப்புக் குடியிருப்புப் பகுதிகள், ஆக்கிரமிக்கும் சமூகங்கள் ஈடுபடும் வன்முறை ஆகியவை குறித்து சிங்கப்பூர், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் கலந்துபேசியதா என்று திரு ஃபட்லி அக்டோபர் மாதம் நடந்த நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த மே மாதம் நடந்த அச்சந்திப்பில் மரண தண்டனை குறித்து இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ் செப்டம்பர் 7ஆம் தேதி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் கேள்வியை முன்வைத்தார்.
மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புக் குடியிருப்புப் பகுதிகள் அனைத்துலகச் சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானவை என்பது சிங்கப்பூரின் நிலைப்பாடாகும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் அதை மறுவுறுதிப்படுத்திக்கொண்டது.
