தலைசிறந்த ஐடிஇ மாணவர்களுக்கு விருதுகள்

3 mins read
a666703c-fd1b-42d4-8b4f-8885a98ae99d
சிறப்பு விருதுகளைப் பெற்ற தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் சுஜய்சரண் தேவகுமார், 19 (இடது), முகமது ரிஜால், 26. - படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்
multi-img1 of 3

கல்விக்கு அப்பாற்பட்டு புறப்பாட நடவடிக்கைகளிலும் சாதனை புரியும் தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டமளிப்பு விழாவில் 18 மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.

விழாவில் கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்‌கு விருதுகளை வழங்கினார்.

மாணவர்களை வாழ்த்திய டாக்டர் மாலிக்கி, ஐடிஇ ஊழியர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். வாழ்நாள் கற்றல், தொடர்ச்சியான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாற்றத்திற்கான விதைகளை விதைக்க மாணவர்களை அவர் ஊக்‌குவித்தார்.

நீ ஆன் கொங்சி தங்கப் பதக்கம்

வழக்கநிலைத் தேர்வுகளுக்‌குப் பிறகு சாதாரண நிலைத் தேர்வுகளுக்‌கு முன்னேறும் வழக்கமான பாதையிலிருந்து விலகி, தனக்‌கென ஒரு தனித்துவப் பாதையை அமைத்துகொண்டார் சுஜய்சரண் தேவகுமார், 19.

சிறுவயதிலிருந்தே நிதித்துறை மீதுள்ள ஆர்வத்தால் உந்தப்பட்ட அவர், ஐடிஇ மத்திய கல்லூரியில் நிதிச் சேவைத் துறையில் உயர் நைடெக் படிப்பில் சேர்ந்தார்.

தனது கல்விப் பயணத்தை நினைவுகூர்ந்த சுஜய்சரண், சரியான மனநிலையுடன் வாய்ப்புகளை உருவாக்குவதில் முழு நம்பிக்‌கை வைத்திருப்பதாகச் சொன்னார்.

“ஐடிஇயின் ஈராண்டு படிப்பை முடித்து, தொழிற்துறை சார்ந்த திறன்களையும் சிறந்த அனுபவங்களையும் பெற்று எதிர்காலப் பணிக்கு என்னை தயார்ப்படுத்திக்‌கொண்டுள்ளேன்.

“தொழில்துறையில் தனித்து நிற்க கல்வித் தகுதியுடன் அனுபவமும் முக்கியம்,” என்றார் அவர்.

முதலீட்டுச் சங்கத்தில் தலைமைத்துவப் பதவி வகித்து, நிதி கல்வியறிவு பட்டறைகளை நடத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளிலும் சுஜய்சரண் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

அவரது முயற்சிகள் லீ குவான் யூ முன்மாதிரி மாணவர் விருது, டேப்லேவ் தொழில்நுட்பப் பரிசு, ஐடிஇ சேவை நட்சத்திர தங்க விருதுடன், இப்பொழுது நீ ஆன் கொங்சி தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளன.

“இந்த விருது எனக்‌குக் கிடைத்த அங்கீகாரம். என் இலக்குகளை மாற்றாமல், நிதி தொழில்துறையில் சிறந்து விளங்க விடாமுயற்சியுடன் செயல்படுவேன்,” என்றார் சுஜய்சரண்.

எதிர்காலத்தில் ஜேபி மோர்கன் நிறுவனத்தில் முதலீட்டு வங்கியாளராக பணியாற்ற இவர் விரும்புகிறார்.

சிங்கப்பூர் துல்லியப் பொறியியல், தொழில்நுட்பச் சங்க தங்கப் பதக்கம்

முகமது ரிஜால், 26, மின்சாரப் பொறியியல் மீதான ஆர்வம், தொழில்நுட்ப வல்லுநராக பணி[Ϟ]புரிந்த அவருடைய மாமாவால் ஏற்பட்டது.

“சில மின்கம்பிகளின் இணைப்பின்வழி பெரிய இயந்திரங்கள் வேலை செய்வதைப் பார்க்‌கும்போது எனக்‌கு ஆச்சரியமாக இருந்தது,” என்று ரிஜால் நினைவுகூர்ந்தார்.

சிறுவயதில் ஏற்பட்ட இந்த ஆர்வமே, ஐடிஇயில் மின்னணுவியல், கணினிக் கட்டமைப்பு மற்றும் தொடர்புத் துறையில் நைடெக்‌ படிக்க அவருக்கு வழிவகுத்தது.

“ஆரம்பத்தில் நான் உற்சாகத்துடன் இருந்தாலும், காலப்போக்கில் பாடங்களில் நான் நன்றாகச் செய்யவில்லை. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட முடிவுசெய்தேன்,” என்றார் ரிஜால்.

தேசிய சேவையை முடித்த ரிஜால், 2021ல் உறுதியுடனும் ஊக்கத்துடனும் ஐடிஇக்குத் திரும்பி விட்டதை வெற்றிகரமாக முடித்தார்.

“படிப்பிலிருந்து விலகிய காலத்தில் நான் விடாமுயற்சி, ஊக்கம், வளர்ச்சி மனப்பான்மையின் முக்கியத்துவத்தைக் கற்றேன். கல்வியின் மதிப்பையும் உணர்ந்தேன்,” என்று அவர் சொன்னார்.

இதைத் தொடர்ந்து, ஐடிஇ மேற்கு கல்லூரியில் மின்சாரப் பொறியியலில் வேலை-படிப்பு பட்டயக் கல்வியில் சேர்ந்த ரிஜால், அதில் சிறந்து விளங்கினார்.

அவரது பணியிடமான ஜென்பிளஸ் நிறுவனத்தில் பல்வேறு புத்தாக்க எரிசக்தித் திட்டங்[Ϟ]களுக்கு பங்களித்ததற்காகவும் உயர் மதிப்பெண்கள் பெற்றதற்காகவும் அவருக்கு சிங்கப்பூர் துல்லியப் பொறியியல், தொழில்நுட்பச் சங்கத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

“இந்த விருதைப் பெறுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய வழிகாட்டிகள், குடும்பத்தினர், சக மாணவர்[Ϟ]களிடமிருந்து நான் பெற்ற ஆதரவுக்கான அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்,” என்றார் அவர்.

2025ல் மின்னியல் பொறியியலில் பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளார் ரிஜால்.

“ஒவ்வொரு பயணத்திலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு, கவனம் செலுத்தி, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்,” என்பதே மாணவர்களுக்கு அவரின் அறிவுரை.

குறிப்புச் சொற்கள்