தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்புக்கு அதிபர் தர்மன், பிரதமர் வோங் வாழ்த்து

2 mins read
f8a2f9db-6486-4d0f-b705-f813a5a5fec0
புதிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடது), துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், - படம்: ஃபேஸ்புக் / லாரன்ஸ் வோங்

அமெரிக்க அதிபராக திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) பொறுப்பேற்கும் டோனல்ட் டிரம்ப்புக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“2024 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் டோனல்ட் டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று ஃபேஸ்புக் பதிவு வழியாக அதிபர் தர்மன் தெரிவித்துள்ளார்.

நிலையான அமைதியையும் வளப்பத்தையும் எட்டுவதில் அமெரிக்கத் தலைமைத்துவத்திற்கு முக்கியப் பங்குண்டு என்று திரு தர்மன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் - அமெரிக்கா இடையே பொருளியல், புத்தாக்கம், பாதுகாப்பு போன்ற துறைகளில் காணப்படும் துடிப்பான ஒத்துழைப்பு மூலம் வலுவான உறவு நீடிப்பதாகக் கூறியுள்ள அவர், குடிமை அணுசக்தி, முக்கிய, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய துறைகளிலும் ஒத்துழைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அதிபர் டிரம்ப்புக்கும் துணை அதிபர் ஜே.டி. வேன்சுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

1965ல் சிங்கப்பூர் தனி நாடானபோது அதனை முதலில் அங்கீகரித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று எனக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த பல பத்தாண்டுகளாக இருநாட்டுப் பங்காளித்துவம் செழிப்புற்று வருவதைச் சுட்டிக்காட்டினார்.

வணிகம், முதலீடு, தற்காப்பு, பாதுகாப்பு, குடிமை அணுசக்தித் தொழில்நுட்பம் எனப் பலதுறைகளிலும் இருநாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகள் நீடித்து வருவதாக அவர் சொன்னார்.

மேலும், டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகத்தின்கீழும் அணுக்கமாகச் செயல்பட்டு அப்பிணைப்பை வலுப்படுத்தவும் அணுக்க ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் சிங்கப்பூர் ஆர்வமாக இருப்பதாகத் திரு வோங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்