200 ஆண்டுகால வரலாறு - சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

200 ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்த மின்னூல்

3 mins read
45f07dc6-e382-486e-8547-a7139ea1352d
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தை மின்தளத்தில் வெளியிட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். உடன் அதிபரின் மனைவி ஜேன் இத்தோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோரும் உள்ளனர். - படம்: பே கார்த்திகேயன்
multi-img1 of 3

காலத்தை வென்ற சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் எனச் சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ள கலைக்களஞ்சியத்தைச் சனிக்கிழமை (ஆகஸ்ட் 02), தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் உள்ள டிராமா சென்டர் அரங்கில் வெளியிட்டுப் பேசிய அதிபர், “பண்பாட்டை பேணும் உறைவிடமாகச் சிங்கப்பூர் தொடர்ந்து திகழவேண்டும்,’‘ என்று வலியுறுத்தினார்.

சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கும் பற்பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களைத் தமது உரையில் அதிபர் மேற்கோள் காட்டினார்.

எந்த வகையிலான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாத சமூக முன்னேற்றம் தொடர்ந்து நிலவவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு தர்மன், ‘‘பல துணை இனக் கலாசாரங்கள் உட்பட பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய இடமாக நமது நாடு இருக்கவேண்டும்,” என்று கூறினார். 

இதுவே உலகளாவிய இந்தியச் சமூகத்திற்கு மத்தியில் சிங்கப்பூர்த் தமிழர்களையும் சிங்கப்பூர் இந்தியர்களையும் தனித்துவமிக்கவர்களாகத் திகழச் செய்யும் என்றார் அதிபர்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கிய ‘சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின்னூல், நாட்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாகிய முதல் கலைக்களஞ்சியம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.

இதன் அங்கமாகத் தமிழ்ச் சமூகத்தின் கதைகளை, வரலாற்றைத் தலைமுறை கடந்தும் கடத்தும் நோக்கில் ஏறத்தாழ 375 பகுதிகளில் பல்வேறு தகவல்களை விவரிக்கும் துல்லியமான பதிவுகள் தகுந்த ஆதாரத்துடனும் புகைப்படங்களுடனும் தேசிய நூலக வாரியத்தின் மின்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

கலைக்களஞ்சியத்தை இணையவெளியில் படிப்பதற்கான வழிமுறை, இருமொழிகளிலும் ஒருசேரப் படிக்க உதவும் தொழில்நுட்பம், வாழும் கலைக்களஞ்சியத்தில் புதிய தலைப்புகளை இணைக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றைச் சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம் தொகுப்பின் துணை ஆசிரியர்கள் அழகிய பாண்டியன், சிவானந்தம் நீலகண்டன் இருவரும் விழா அரங்கில் விளக்கினர்.

விழாவில் உரையாற்றிய சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியும் தொகுப்பின் ஆசிரியருமான அருண் மகிழ்நன், ‘‘இந்த மின்னூல், மக்களைப் பற்றி மக்களால் உருவாக்கப்பட்ட தேர்,’’ என்றார்.

இந்த அருஞ்செல்வம் உருப்பெற உதவி புரிந்தோருக்கு நன்றி கூறிய அவர், இதனை வாழும் களஞ்சியமாக நிலைக்கச் செய்ய, சமூகத்தைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னார்.

தேசிய நூலக வாரியத் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் துணை இயக்குநருமான அழகிய பாண்டியன், ‘‘இந்தக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவ​தற்கான ​மூன்று ஆண்டுப் பயணம் சுவாரசியமானது, இனிமையானது. எதிர்காலச் சந்ததியினருக்கான ஒரு கருவூலத்தை உருவாக்குவதில் பங்காற்றக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்,’’ என்றார்.

தேசிய நூலக வாரியம் இருக்கும் வரை சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம் வாழ்ந்துகொண்டே இருக்கும் என்றார் அவர்.

விழாவில் அதிபர் தர்மனின் மனைவி ஜேன் இத்தோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், பங்காளித்துவ அமைப்பினர், தொண்டூழியர்கள் உட்பட ஏறத்தாழ 600 பேர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட http://go.gov.sg/nlb-est இணையப்பக்கத்துக்குச் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வரலாறுகலைக்களஞ்சியம்