உலகம் குழம்பிய நிலையில் இருப்பதால் புவிசார் அரசியல் பதற்றத்தையும் பூசலையும் சமாளிக்க பெரிய, சிறிய நாடுகள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அதன்வழி போருக்கான அபாயத்தைக் குறைக்க முடியும் என்றார் அவர்.
பிரதமராக சீனாவுக்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் முதல் பயணம் இது. பயணத்துக்கு முன் சீனாவின் அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவியிடம் அளித்த நேர்காணலில் சீனத் தலைவர்களுடன் வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூரும் சீனாவும் பலதரப்பு அணுகுமுறையையும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்கையும் எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது பற்றியும் பேசவிருப்பதாகத் திரு வோங் சொன்னார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் லி கியா ஆகிய சீனத் தலைவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், ஜூன் 22ஆம் தேதியிலிருந்து ஜூன் 26ஆம் தேதி வரை திரு வோங், திரு ஸியையும் திரு லீயையும் சந்திக்கவிருப்பதாக இதற்கு முன் அறிவித்தார்.
“நாம் மிகவும் குழப்பமான, கணிக்க முடியாத மாற்றத்தில் இருக்கிறோம்,” என்ற பிரதமர் வோங், இரண்டாம் உலகப் போருக்குப் பின் அனைத்துலக ஒழுங்கை வடிவமைக்க அமெரிக்கா உதவியது என்றும் சீனா, அமெரிக்கா என பல நாடுகள் அதன் மூலம் பயனடைந்துள்ளன என்றும் கூறினார்.
இப்போது அமெரிக்காவே அதிலிருந்து பின்வாங்குவதாக கூறிய பிரதமர் வோங், “உலகில் வேறு எந்த நாட்டாலும் அமெரிக்காவின் இடத்தை நிரப்ப முடியாது.
தொடர்புடைய செய்திகள்
“சொல்லப்போனால் இப்போதைக்கு அதற்குப் பதில் இல்லை,” என்றார்.