பிரதமர் லாரன்ஸ் வோங், பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துள்ளார்.
ஏபெக் உச்சநிலை மாநாட்டிற்கிடையே இரு தலைவர்களும் சந்தித்தனர். திரு வோங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு சீன அதிபரைச் சந்திப்பது இதுவே முதன்முறை.
சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு வோங், குறிப்பாக 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் இருதரப்பு உறவுகள் அதிகாரபூர்வமாக மேம்படுத்தப்பட்டதைச் சுட்டினார்.
சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் இடையில் தற்போது, வருங்காலத்தை மையப்படுத்திய முழுமையான, உயர்தரப் பங்காளித்துவம் நிலவுவதாக அவர் கூறினார்.
அதிகாரபூர்வ மேம்பாட்டுக்குப் பிறகு, இருதரப்பு உறவுகள் தொடர்ந்து ஆக்ககரமான நிலையில் இருக்கிறது என்று திரு வோங் சொன்னார்.
சீனா சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி என்பதையும் சீனாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டைச் செய்யும் ஆகப் பெரிய நாடு சிங்கப்பூர் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரும் சீனாவும் நட்பார்ந்த அண்டை நாடுகள் என்றும் முக்கியமான பங்காளித்துவ நாடுகள் என்றும் அதிபர் ஸி கூறினார்.
அடுத்தடுத்த தலைமுறைத் தலைவர்களைக் கவனத்துடன் உருவாக்கும் நிலையில், சீனா-சிங்கப்பூர் உறவுகளின் மேம்பாடு, இருதரப்புக்கும் நன்மையளிக்கும் மேம்பாடு என்ற வகையில் உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளும் தற்போது மேம்பாட்டின் முக்கியக் கட்டத்தில் இருப்பதாகக் கூறிய திரு ஸி, அடுத்த ஆண்டுடன் இருதரப்பு அரசதந்திர உறவுகள் தொடங்கி 35 ஆண்டுகள் நிறைவடையும் என்று குறிப்பிட்டார்.
நவீனமயமாதல் தொடர்பில் சிங்கப்பூருடன் தொடர்ந்து ஒத்துழைக்க சீனா விரும்புவதாக அவர் கூறினார். உயர்தர ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்க சீனா தயாராக இருப்பதாகவும் அதிபர் ஸி கூறினார்.
பிரதமர் வோங், நவம்பர் 16ஆம் தேதி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
ஆஸ்திரேலியப் பிரதமருடன் உலகளாவிய, வட்டார விவகாரங்கள் குறித்தும் இருதரப்புப் பங்காளித்துவம் குறித்தும் கலந்துரையாடியதாகப் பிரதமர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் பல பொதுவான அம்சங்கள் இருப்பதாகவும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் வழியாக இருதரப்பும் நன்மை அடைவதாகவும் எக்ஸ் தளத்தில் பிரதமர் வோங் பதிவிட்டுள்ளார்.