தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து ‘எஸ் எஸ் ரஜுலா’ கப்பலில் ஏறிய 1968 பிப்ரவரி 9ஆம் தேதியைத் திருவாட்டி ஜெஸி மார்கிரேட் இன்னும் நினைவில் வைத்துள்ளார்.
அவரின் கணவரான சிங்கப்பூரர் திரு தனபாலன் துரைராஜா, இந்தியா சென்று 1967 ஜூலை மாதம் திருவாட்டி மார்கிரேட்டை மணமுடித்து, மூன்று மாதங்கள் கழித்து சிங்கப்பூர் திரும்பிவிட்டார். பல மாதங்கள் கழித்து நிறைமாத கர்ப்பிணியாகத் தம் கணவரைச் சந்திக்க ரஜுலாவில் புறப்பட்டார் திருவாட்டி மார்கிரேட்.
“ஏறத்தாழ 100 மணி நேரப் பயணம். கப்பலில் கடைசி அடுக்கில் படுத்துக்கொண்டே பயணம். உணவு தருவார்கள். பொழுதுபோக்கிற்காகக் கப்பலின் மேல் அடுக்கில் தமிழ் நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி நடித்த திரைப்படங்களைத் திரையிடுவார்கள்,” என்று கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் நினைவால் பின்னோக்கி பயணம் செய்து, தாம் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்த கதையைத் திருவாட்டி மார்கிரேட் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் .
சிங்கப்பூருக்கு வந்துசேர்ந்த இரு நாள்களிலேயே, ஹேம்ப்ஷியர் சாலையில் இருந்த அப்போதைய கேகே மருத்துவமனையில் தமது முதல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அவர்.
“சிங்கப்பூரின் தொடக்கக்கால வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. ஜாலான் பெமிம்பினில் உள்ள ஓர் அறை கொண்ட கம்போங் வீட்டில் வசித்து வந்தோம்.
‘‘கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பல நேரங்களில் கேணியில் தண்ணீர் எடுப்போம். கம்பம் என்பதால் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து காணப்படும். சில வேளைகளில் பாம்பு ஓடுவதைக்கூட மிரட்சியுடன் பார்த்திருக்கிறேன்,” என்று விவரித்தார் திருவாட்டி மார்கிரேட்.
திருமணமாகி சில ஆண்டுகளில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததாகவும் பிறகு குடும்ப வன்முறைக்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.
உற்றார் கைவிட்டாலும் நாடு எப்படித் தம்மை அரவணைத்தது என்பதையும் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி மார்கிரெட்.
‘‘அப்போது நிலவிய சூழல் பின்னடைவாக இருந்தது. இரு பிள்ளைகளுடன் தனியாக நின்றேன். எனினும், நாடு சுதந்திரம் பெற்றபிறகு காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் லீ குவான் யூ தலைமையில் நாடு அடைந்த முன்னேற்றத்தால் நானும் பயனடைந்தேன்.
‘‘அரசாங்கம் அடுக்குமாடி வீடுகளைக் கட்டிய பிறகு 1972ல் தோ பாயோவில் உள்ள ஓரறை வீட்டுக்குக் குடிபெயர்ந்தேன். தண்ணீர், மின்சாரம் என அனைத்தையும் ஒரே கூரையின்கீழ் முதன்முதலில் பார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது,” என்று பூரித்தார் திருவாட்டி மார்கிரேட்.
எனினும், வாழ்க்கையை நடத்தவும் பிள்ளைகளைப் பராமரிக்கவும் பணம் தேவைப்பட, அப்போது தம் நிலையைப் பற்றி அறிந்த சமூக நல அதிகாரி தமக்கு உதவிக்கரம் நீட்டியதை குறிப்பிட்டார் அவர்.
“நான் வசித்து வந்த வீட்டிற்கு அருகில் உள்ள பொம்மை செய்யும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இது நான் யாரையும் சாராமல் வாழ்க்கை நடத்த உதவியது.
‘‘சில ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. பிறகு நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, சாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையற்கூடத்தில் வேலை கிடைத்தது,’’ என்றார் அவர்.
அந்தப் பயணம் நிலைக்க அண்டைவீட்டார் எப்படிக் கைகொடுத்தனர் என்பதையும் திருவாட்டி மார்கிரேட் நினைவுகூர்ந்தார்.
“சிலவேளை விமானச் சேவை தடைபட்டால் எனது பணி தாமதமாகும். இருப்பினும், சிங்கப்பூரில் கிடைத்த பாதுகாப்பு, பிற இனத்தைச் சேர்ந்த கனிவுமிக்க அண்டைவீட்டாரின் ஆதரவால் என் இரு பெண்பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு, நான் தனியாக வேலைக்குச் செல்ல முடிந்தது.
‘‘பிள்ளைகளுக்கு ஏதேனும் உதவி வேண்டுமென்றால் சீன, மலாய் அண்டைவீட்டுக் கூட்டாளிகள் பார்த்துக்கொள்வார்கள். சிங்கப்பூரின் வீதிகள் பாதுகாப்பாக இருந்தன.
‘‘போக்குவரத்து வசதிகள் கிடைத்தன. எனவே அச்சம் இல்லாமல் நானும் நள்ளிரவு, அதிகாலையென எந்த நேரத்திலும் சிரமமின்றி வீடு திரும்ப முடிந்தது,” என்று கூறி, நாட்டின் கட்டமைப்பிற்காக நன்றி தெரிவித்தார் திருவாட்டி மார்கிரேட்.
எவரையும் சாராமல் சுயமாக உழைத்து ஆற்றல்மிக்க பெண்மணியாகத் தம்மை மாற்றிய நாடு, தேசிய தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், தாமும் தம் தலைமுறையினரும் நாட்டுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“எத்தனையோ நாடுகளில் இளையருக்குக்கூட வேலைவாய்ப்பில்லாத நிலையைப் பார்க்க முடிகிறது. ஆனால், இங்கு என்னைப் போன்ற முதியோருக்கும் ஊழியரணியில் இடமளித்து, துடிப்புடன் நாங்கள் முதுமையடையவும் பிள்ளைகளுக்குச் சுமையாக அல்லாமல் துணையாக இருக்க உதவி செய்யும் பாங்கு தனித்துவமானது,” என்கிறார் திருவாட்டி மார்கிரேட்.
கரைசேருவோமா என்று கலங்கியபடி வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று தம் குடும்பத்தையும் கரைசேர்த்துவிட்டார். வீவக வீட்டில் வசிக்கும் அவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் எனத் தம் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளையும் கண்டுவிட்டார்.
இன்னும் சில மாதங்களில் 80வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் திருவாட்டி மார்கிரேட், தமக்கு அடையாளத்தையும் வாய்ப்புகளையும் நல்கிய சிங்கப்பூரின் பயணம் நம்பிக்கை, முன்னேற்றம், சகோதரத்துவம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது என்றார்.
சிங்கப்பூர் என்றதுமே நினைவிற்கு வருவது குறித்து கேட்டதற்கு, ‘‘திரு லீ குவான் யூ,’’ என்று உடனே அவர் பதிலுரைத்தார்.
‘‘எனக்குக் குடியுரிமை அளித்து, நல்ல திட்டங்களை வகுத்து, வாழ்க்கையை வளமாக்கிய திரு லீயின் புகைப்படத்திற்கு இப்போதும் எங்கள் வீட்டில் இடம் உண்டு,” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய அவர், சிங்கப்பூரர்கள் அனைவர்க்கும் தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

