சிங்கப்பூர் ஊழியரணியில் ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வியாளர்கள் ஒரு விழுக்காடு மட்டுமே இருந்தாலும், அவர்கள் எதிர்கால வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்று கூறியுள்ளார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா.
ஆரம்பகாலப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு உபகாரச் சம்பளம், பயிற்சி விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சிறுமி மேகன் கங்கின் இழப்பைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பள்ளிகள், கல்வியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடன் இணைந்து ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த உழைக்கும்,” என்றார்.
மேலும், குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள், வன்முறைகளுக்கு எதிரான முதற்கட்டப் பாதுகாப்பும் ஆதரவும் வழங்கும் நிலையில் கல்வியாளர்கள் இருப்பதைச் சுட்டினார்.
“எனவே, அவற்றைச் சரியான நேரத்தில் கண்டறிந்து, புகாரளிக்கத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம். இது, பிள்ளைப் பாதுகாப்புக்கான அமைப்புகள் தலையிட்டு ஆதரவளிப்பதற்கு உதவும்,” என்றார்.
பெரிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக, பிள்ளைகளின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிசெய்வது அனைவரது கடமையாகும் என்றும் தெரிவித்தார்.
உபகாரச் சம்பள மேம்பாடுகள்
இந்த உபகாரச் சம்பளம் வரும் ஆண்டு முதல் ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வி உபகாரச் சம்பளமாக மேம்பாடு காணவுள்ளதாக அறிவித்த திரு எரிக் சுவா, அதன் மூன்று புதிய மேம்பாடுகளையும் அறிவித்தார்.
பகுதிநேர ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வித் துறையில், பகுதிநேர இளங்கலை அல்லது முதுகலைக் கல்வியைத் தொடரும் தகுதிபெற்ற, பணியில் உள்ள கல்வியாளர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை (study bonus) 2,000 வெள்ளியிலிருந்து 8,000 வெள்ளியாக உயர்த்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் தகுதிபெற்ற கல்வியாளர்களுக்கு 2,000 வெள்ளி மாதப் படித்தொகை, 2,000 வெள்ளி கல்வி வளங்களுக்காக ஒருமுறை வழங்கப்படும் படித்தொகையுடன் முழு கல்விக் கட்டணத்துக்கான உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.
இவை 2027ஆம் ஆண்டு ஜூலை மாதச் சேர்க்கையில் நடப்புக்கு வரும்.
இவ்வாண்டு முதல், பணியில் உள்ள சீன மொழிக் கல்வியாளர்களுக்கான முதுகலைக் கல்விக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. இது, ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வியில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தங்கள் நிபுணத்துவத்தை விரிவாக்க அக்கல்வியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
பயிற்சி விருதுகள், உபகாரச் சம்பளம் வழங்கும் விழா
இவ்வாண்டுக்கான உபகாரச் சம்பளம், விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமையன்று (அக்டோபர் 30) சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. விழாவில் 274 கல்வியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
மொத்தம் 252 கல்வியாளர்களுக்குப் பயிற்சி விருது வழங்கப்பட்டது. இது தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத்தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முழுநேரக் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் படித்தொகைகளுடன் கூடிய முழு கல்விக் கட்டண ஆதரவை வழங்கும்.
மேலும், பணியில் இருக்கும்போது பகுதிநேரக் கல்வி மேற்கொள்ளும் எட்டு கல்வியாளர்களுக்குக் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
அத்துடன், கல்வி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய 14 மாணவர்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது.
ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வியாளராக விரும்பும் மாணவர்களுக்கும், பணியில் உள்ள, நிபுணத்துவ மேம்பாட்டுக்காக மேற்படிப்பு மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
இது, கல்வியாளர்களின் பணி வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வலுவான ஆதரவளிக்கும் நோக்கம் கொண்டுள்ளது.
இந்த உபகாரச் சம்பளம், பயிற்சி விருதுகள் வழங்கும் விழாவில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அவர், “சிறுகுழந்தைகளின் தொடக்ககால வளர்ச்சியில் அவர்களைச் சிறப்பாக வடிவமைப்பதில் கல்வியாளர்கள் கடப்பாடு கொண்டுள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இத்துறையில் திறமையாளர்களை வளர்த்து, தக்கவைத்துக் கொள்வதில் உறுதி கொண்டுள்ளதாகவும், அதற்கு இவ்வகை, உபகாரச் சம்பளம், விருதுகள் வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.
அவர், விருது வென்ற இரு ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வியாளர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். எட்டு ஆண்டுகளாக இத்துறையில் செயல்பட்டு வரும் 30 வயது டர்ஷினி பாலசந்திரன், முதுகலைக் கல்விக்கான உபகாரச் சம்பளம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
“ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வி ஒரு பணிக்கான தெரிவு என்பதைத் தாண்டி, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்க எனக்கு இடப்பட்ட கட்டளையாக, எனது கடமையாகக் கருதுகிறேன். ஆசிரியர்களான நாங்கள் ஏற்படுத்தும் தாக்கம், வகுப்பறையைத் தாண்டி வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் பயணிக்கும் என்பதை அறிந்துள்ளோம்,” என்றார் டர்ஷினி பாலசந்திரன்.

