சிறப்புக் கல்வித் துறையில் சாதித்தோர்க்கு அங்கீகாரம்

கல்வி அமைச்சின் ‘எஸ்ஜி எனேபல்’ விருதுகள்

சிறப்புக் கல்வித் துறையில் சாதித்தோர்க்கு அங்கீகாரம்

2 mins read
6357a881-f7ad-4bef-84bd-ae960da8d39e
நம்பிக்கைக்குரிய சிறப்புக்கல்வி ஆசிரியர் விருது பெற்றார் ‘கிரேஸ் ஆர்ச்சர்ட்’ பள்ளியின் மூத்த ஆசிரியர் காமினி ராமகிருஷ்ணன். - படம்: கல்வி அமைச்சு

மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவனுக்கு ஒரு பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குவதை முன்னுரிமையாகக் கொண்டிருந்தார் சிறப்புத் தேவையுடையோர்க்கான ‘கிரேஸ் ஆர்ச்சர்ட்’ பள்ளியின் மூத்த ஆசிரியர் காமினி ராமகிருஷ்ணன்.

கடுமையான உணர்வுக் கட்டுப்பாட்டுச் சவால்கள் காரணமாக அந்த மாணவனுக்குக் கடுமையான உடற்குறைபாடுள்ளோர்க்கான தீவிர, தொடர் ஆதரவு தேவைப்பட்டது.

“அவர் பணிகளைப் படிப்படியாகக் கையாள, தெளிவான கட்டமைப்புகள், காட்சி ரீதியான ஆதரவுகள், சீரான நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டன,” என்றார் திருவாட்டி காமினி.

திருவாட்டி காமினி உட்பட சிறப்புத் தேவையுடையோர்க்கான கல்வித்துறையில் சேவையாற்றும் ஆசிரியர்கள் நால்வர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) கல்வி அமைச்சின் ‘எனேபல்’ விருது பெற்றனர்.

கல்வி அமைச்சும் ‘எஸ்ஜி எனேபல்’ அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விருதுகள் சிறந்த சிறப்புக்கல்வி ஆசிரியர் விருது , நம்பிக்கைக்குரிய சிறப்புக்கல்வி ஆசிரியர் விருது, புத்தாக்க விருது ஆகியவற்றை உள்ளடக்கியது.

திருவாட்டி காமினி நம்பிக்கைக்குரிய சிறப்புக்கல்வி ஆசிரியர் விருதைப் பெற்றார்.

முன்பு பிறரின் உதவியைப் பெரிதும் நம்பியிருந்த மாணவர் ஒருவர் இப்போது தானாகவே செயல்படுவது மிகுந்த மனநிறைவளிப்பதாகக் கூறினார் காமினி.

“இதுபோன்ற அனுபவங்கள் நான் ஏன் இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை நினைவூட்டுகின்றன,” என்றார் அவர்.

இருவருக்குக் கல்வி அமைச்சின் சிறப்புக் கல்விக்கான முதுநிலைக் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

சிறப்புத் தேவையுடையோர்க்கான கல்விச் சேவைத்துறையின் ‘ஏ.சி.இ’ (Affirmation·Celebration·Engagement) கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சேவையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹாருன் அல்ஹப்ஷி.

இவ்வாண்டு சிறந்த சிறப்புக்கல்வி ஆசிரியர் விருது, நம்பிக்கைக்குரிய சிறப்புக்கல்வி ஆசிரியர் விருது பெற்றவர்கள் மொத்தம் 179 பரிந்துரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆறு சிறப்புக் கல்விப் பள்ளிகளைச் சேர்ந்த நான்கு திட்டங்கள் புத்தாக்க விருது பெற்றன. இந்த ஆண்டுக்கான புத்தாக்க விருது பெற்றவர்கள் 14 சிறப்புக் கல்விப் பள்ளிகளின் மொத்தம் 19 திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்