அரை நூற்றாண்டாகப் புரிந்துவரும் தொண்டூழியச் சேவையை, வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும், இளைய தலைமுறையினருக்கும் அதனைப் பகிர வேண்டும் என்பதே 74 வயதான திரு பக்கிரிசாமி சாம்பசிவத்தின் விருப்பம்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘தொண்டூழியர் விருது விழா 2024’ நிகழ்வில் ‘உன்னத விருது’ பெற்றுக்கொண்ட ஐவருள் திரு பக்கிரிசாமியும் ஒருவர்.
சீலாட் ரோடு கம்பத்தில் 13 வயதில் தொடங்கிய இந்தத் தொண்டூழியப் பணியைத் திருப்பணியாகக் கருதி தொடர்ந்து செய்து வருவதாகக் கூறினார் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தொண்டூழியர் திரு பக்கிரிசாமி.
“கோயில் விளக்குகளைத் துடைப்பது, வளாகங்களைச் சுத்தம் செய்வது எனத் தொடங்கிய தொண்டூழியம் இது. இன்று தீமிதி, அன்னதானம், திருவிழாக்கள் என விரிவடைந்துள்ளது. அன்றும் இன்றும் இச்சேவைகளுக்கான களம் மாறியுள்ளது. எனினும், சேவையின் பலன் மாறவில்லை. தொண்டூழியத்தை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு வாழையடி வாழையாகக் கொண்டுசெல்ல வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இளையர்கள் இப்பணியில் ஈடுபடுவது சிறந்தது என்று சொன்ன திரு பக்கிரிசாமி, தொடர்ந்து இதுபோன்ற கோயில் சார்ந்த தொண்டூழியத்தில் ஈடுபடும்போது மனத்தில் கெட்ட எண்ணங்கள் தோன்றாது என்றும் சீரிய முறையில் வாழ்க்கையை அமைத்திட முடியும் என்றும் சொன்னார்.
தன்னலமற்ற சேவையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வரும் தொண்டூழியர்களைச் சிறப்பிக்கும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இவ்வாண்டிற்கான தொண்டூழியர் விருது விழா சனிக்கிழமை (செப்டம்பர் 14) மாலை நடைபெற்றது.
விழாவில் தங்கள் நேரம், திறன்களை வாரியத்தின் தொண்டூழியப் பணிகளுக்கு அர்ப்பணித்த தொண்டூழியர்களுக்கு இரண்டு பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது வாரியத்தின் தொண்டூழியர் விருதுகள்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பான வகையில் சமூகச் சேவை புரிந்து வருவோரைப் பாராட்டும் வகையில் ‘உன்னத’ விருதும் ஏறத்தாழ 10 முதல் 20 ஆண்டுகள் வரை தலைசிறந்த தொண்டூழியச் சேவை புரிந்தவர்களுக்கு ‘சாதனை’ விருதும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் வி. செல்வம்.
தொடர்புடைய செய்திகள்
விருது வழங்கும் விழாவில் உன்னத விருது ஐவருக்கும் சாதனை விருது 76 பேருக்கும் வழங்கப்பட்டன. நேற்றைய விழாவில் உன்னத விருது பெற்றவர்களுள் 78 வயது திருவாட்டி இராஜகாந்தம் கணேசனும் ஒருவர். ஸ்ரீ சிவன் கோயில் தொண்டூழியரான திருவாட்டி இராஜகாந்தம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாரியத்தின் பல்வேறு தொண்டூழிய நடவடிக்கைகளில் அயராது ஈடுபட்டு வருகிறார்.
தோரணம் கட்டுதல், மாலை தொடுத்தல், காய்கறி நறுக்குதல், உண்டியல் காணிக்கை எண்ணுதல் எனத் தொண்டூழியம் சார்ந்த பற்பல பணிகளில் துடிப்புடன் ஈடுபடுவது இவரது வழக்கம்.
“பல ஆண்டுகளுக்குமுன் என் கணவரின் மறைவுக்குப் பிறகு தொண்டூழியப் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். என் மகள் உட்பட பலருக்கும் கோயில் தொண்டூழியச் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறேன். வெவ்வேறு கோயில்களுக்குச் சென்று தொடர்ந்து தொண்டூழியம் செய்யும்போது மக்களைத் தவறாது சந்திக்க முடிகிறது. சமூகத்தில் இத்தகைய தன்னார்வலர்களின் பங்கு என்ன என்பது குறித்து அவர்களுக்குச் செயல்வழி காட்டவும் இயலும். இவை மனத்திற்கு நிறைவைத் தருகின்றன,” என்றார் திருவாட்டி இராஜகாந்தம்.
கடப்பாடு, அர்ப்பணிப்பு, உற்சாகத்துடன் சிறப்பான முறையில் சேவையாற்றியதற்காகத் திரு அச்சுதன் ஆனந்தகுமார், 64 (ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்), திரு மோத்தி லால் பிரசாத், 54 (ஸ்ரீ மாரியம்மன் கோயில்), காலஞ்சென்ற திருவாட்டி சிதம்பரம் கமலா, 73, ஆகியோருக்கும் நேற்றைய விழாவில் உன்னத விருது வழங்கிச் சிறப்பித்தது இந்து அறக்கட்டளை வாரியம்.
ஸ்ரீ மாரியம்மன் கோயில் தொண்டூழியரான காலஞ்சென்ற திருவாட்டி சிதம்பரம் கமலா சார்பில் அவருடைய பேத்தி திருவாட்டி ஞானேஸ்வரி அன்பழகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
விழாவில் உரையாற்றிய இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன், “சமூகத்தில் வாரியம் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் பெற்றுள்ள வெற்றிகளும் தொண்டூழியர்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது,” என்று குறிப்பிட்டார்.
“வாரியத்தின் தொண்டூழியங்களில் தங்களை ஈடுபடுத்தி, பரந்துபட்ட சமூகத்திற்குச் சேவையாற்றுவதில் வாரியத்தின் ஒவ்வொரு தொண்டூழியரும் மகிழ்ச்சி, நற்பண்பு போன்றவற்றை உணர்வார்கள்,” என்றும் திரு ராஜன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

