பண்பாடும் பாரம்பரியமும் சங்கமிக்கும் ஒரு கொண்டாட்டம்

3 mins read
048c1051-3d10-4b97-890e-8f820d82d7a1
திரு திமத்தி லோக், திருமதி குளோரியா சுஷ்மிதா ஃபிரான்சிஸ். - படம்: குளோரியா சுஷ்மிதா ஃபிரான்சிஸ்

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாகப் பணம் வைத்து ‘ஹொங் பாவ்’ உறைகள் வழங்கப்பட்டுவரும் வேளையில், சீன- இந்தியத் தம்பதியினரான திரு திமத்தி லோக், திருமதி குளோரியா சுஷ்மிதா ஃபிரான்சிஸ் தங்களின் புத்தாண்டுப் பரிசாக ஒருவருக்கொருவர் நேசத்தையும் அவரவரின் பண்பாட்டு விழுமியங்களையும் பரிசாக அளித்து மகிழ்ந்தனர்.

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக இருவரும் அறிமுகமாகி இருந்த நிலையில் கடந்த ஆண்டு மணவாழ்வில் இணைந்த 29 வயது திமத்தி லோக், 28 வயது திருமதி குளோரியா இருவரும் இந்த ஆண்டு தம்பதியாக சீனப் புத்தாண்டை வரவேற்கின்றனர்.

“முதன்முதலில் என் குடும்பத்தினருக்கு குளோரியாவை அறிமுகப்படுத்திய சீனப் புத்தாண்டு குடும்ப ஒன்றுகூடலின்போது மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். ஒருபுறம் உறவினர்களிடம் என் வருங்கால மனைவியை அறிமுகம் செய்வது, மறுபுறம் அவர் தனியாக இருக்கும்போது அவரிடம் சென்று அவரைக் கவனிப்பது என்று பரபரப்பாக இருந்தேன்.

“ஆனால் இந்த ஆண்டு குளோரியா என் மனைவியாக இணைந்துவிட்டதால் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் இணைகிறேன்,” என்று புன்னகைத்தார் திரு லோக்.

சீனக் குடும்பத்திற்கு மருமகளாகச் செல்வதற்காகத் தாம் எடுத்துக்கொண்ட சில குறிப்பிட்ட முயற்சிகளை மகிழ்ச்சியுடன் விவரித்தார் திருமதி குளோரியா.

“எங்கள் வாழ்வின் அடித்தளமானது எங்கள் இருவரின் பாரம்பரியங்கள், கலாசாரப் புரிதலின் அடிப்படையில் துவங்கியது. இந்த அன்பின் பயணத்தைச் சிறப்பாக்குவதற்காக, குறிப்பாகக் கணவர் குடும்பத்தில் உள்ள மூத்தோர், உறவினர்களைச் சந்திக்க அவர்களுடன் இணக்கமாகப் பழக சீன மொழியில் பல்வேறு வாழ்த்துக் குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்.

“இந்தப் பயிற்சிகள் வாழ்வில் இணைந்திட மட்டுமல்லாமல் பிறர் கலாசாரத்தை மதித்து, அதைப் போற்றிட வேண்டும் என்ற எண்ணத்திலும்தான்,” என்றார் திருமதி குளோரியா.

அன்பிற்கு இனம் இல்லை, மொழியும் இல்லை

மணமுடிப்பதற்கு முன்பு ஏராளமான புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தாம் கண்டிருந்தாலும் இந்திய மனைவியுடன் கொண்டாடும் இந்தப் புத்தாண்டு தமக்குப் பேரானந்தத்தைத் தருகிறது என்றார் திரு லோக்.

“ஒரு தம்பதியாக நாங்கள் மணமாகாத இளையர்களுக்கு ‘ஹொங் பாவ்’ வழங்க வேண்டும். அதற்கான ஆயத்த வேலைகளைச் சிறப்பாகவே செய்து முடித்துவிட்டோம். உணவு, பண்டங்கள் புத்தாடை என அனைத்தும் எங்களை மேலும் உற்சாகப்படுத்துகின்றன.

“ஒன்றுகூடல் விருந்தில் என் மனைவிக்குப் பிடித்த உணவு வகைகளை என் தாயார் சமைத்துவிட்டார். இது இனங்களைத் தாண்டி உறவுகளைக் கொண்டாடும் இனிய புத்தாண்டின் துவக்கம்,” என்று குறிப்பிட்டார் திரு லோக்.

குளோரியா, அவரின் குடும்பத்தினரிடம் இருந்து குடும்ப உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியம் என்பதைத் கற்றுக்கொண்டதாகக் கூறினார் திரு லோக்.

அதேபோல இரவு உணவு ஒன்றுகூடல் தொடர்பான வழக்கம், அதன் முக்கியத்துவத்தைத் தம் கணவர் குடும்பத்தைப் பார்த்து அதை அறிந்துகொண்டதாகச் சொன்னார் திருமதி குளோரியா.

இவ்வாறு காலங்காலமாகத் தொடரும் பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்வதில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் துடிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, சீன மருமகன் குடும்பத்தில் இணைந்தது பெரும்பேறு என்றனர் திரு ஃபிரான்சிஸ் துரைராஜ், 61, திருமதி மோலி ஃபிரான்சிஸ், 59.

“பல்லின மக்கள் நல்லிணக்கமாக வாழும் சிங்கப்பூரில் நாம் சக சிங்கப்பூரர்களின் பாரம்பரியம், மரபுகளை அறிந்திடல் அவசியம்,” என்றார் திருமதி மோலி.

மருமகனுக்குப் பிடித்த இந்திய உணவுவகைகளைச் சமைத்துக் கொடுப்பது மிகுந்த பிரியம் என்ற அவர், இனி வரும் காலங்களில் அவருக்குப் பிடித்த சீன உணவு வகைகளையும் சமைத்துக் கொடுக்க ஆவலாக உள்ளதாகவும் சொன்னார்.

“அன்புக்கு மொழியும் இனமும் இல்லை. எனவே, மனங்கள் இணையும்போது அவர்களை வரவேற்பதுதான் சரி. அதையே நாங்கள் செய்தோம்,” என்றார் திரு ஃபிரான்சிஸ்.

இன, கலாசார வேறுபாடுகள் சில நேரங்களில் நம்மைப் பிரிக்கக்கூடிய உலகில் எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை, நேசம் என்பதையும் கடந்தது. எந்த வேற்றுமையையும் வெல்லக்கூடிய வலிமை அன்பிற்கு உள்ளது என்ற நினைவூட்டலுடன் நேர்காணலை நிறைவு செய்தார் திரு ஃபிரான்சிஸ்.

குறிப்புச் சொற்கள்