தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழாசிரியர்களுக்கான வரலாற்று மின்னூல் வெளியீடு

4 mins read
2aaf45cf-e285-4ba8-a2b2-e4780b78c6b5
தமிழாசிரியர்களுக்கான வரலாற்று மின்னூல் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடு கண்டது. - படம்: ரவி சிங்காரம்

தமிழாசிரியர்களுக்கான வரலாற்று மின்னூலை புதன்கிழமை (ஆகஸ்ட் 6) சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

‘சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்: வரலாற்று மறுபார்வையில் சிங்கப்பூர்த் தமிழரின் அனுபவங்கள்’ என்ற தலைப்பிலான இந்நூல், சோழர் காலத்தில் தொடங்கி நவீன காலம்வரை நடந்தேறிய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்கூறுகிறது.

இவ்வாண்டு 15ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின் தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் தமிழாசிரியர்களுக்காக புதன்கிழமை (ஆகஸ்ட் 6) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின் கல்வித்துறைக்குரிய துணைத் தலைமை இயக்குநர் (பணித்திறன் மேம்பாடு) பீட்ரிஸ் சோங் நூலை வெளியிட்டார்.

சிங்கப்பூர் வரலாற்றின் ஆறு வெவ்வேறு காலகட்டங்களைத் தமிழர்களின் கண்ணோட்டத்திலிருந்து மின்னூல்வழி காண முடியும்.

‘சிங்கப்பூர்த் தமிழர் யார்?’, ‘ஆங்கிலேயர் ஆட்சிக்குமுன் சிங்கப்பூர்த் தீவில் தமிழர் குடியேற்றம் இருந்ததா?’ போன்ற சுவைத் தகவல்களையும் மின்னூல் வழங்குகிறது.

எஸ்ஜி60ஐ முன்னிட்டு 60 வினாக்களும் விடைகளும் அடங்கியுள்ள இந்நூல் சிங்கப்பூரின் வரலாற்றை மாணவர்களுக்குக் கொண்டுசெல்ல தமிழாசிரியர்களுக்குத் துணைபுரியும்.

மின்னூலின் ஆசிரியர், ‘அந்தாதி’ நிறுவனத்தின் நிறுவனரும் வரலாற்றாசிரியருமான நளினா கோபால்.

https://issuu.com/pdtluptlc/docs/_ எனும் தளத்தில் மின்னூலைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்நூல் ஆங்கிலத்திலும் வெளியாகவிருக்கிறது

“அனைவரையும் ஒன்றிணைப்பது தேசிய அடையாளம்தான். நம் நாட்டின் முக்கிய வரலாற்றுக் கூறுகள், தலைவர்கள் பற்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வது ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. அவர்கள் சரியான வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்,” என்றார் சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின் தலைமை முதன்மை ஆசிரியர் சுப்பிரமணியம் நடேசன்.

வாசிப்பு ஊக்குவிப்பு

தம் பள்ளியின் வாசகர் மன்ற நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் ஆசிரியர்.
தம் பள்ளியின் வாசகர் மன்ற நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் ஆசிரியர். - படம்: ரவி சிங்காரம்

கருத்தரங்கில், முறைப்படுத்தப்பட்ட வழியில் தமிழ்மொழி வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டுச் சோதனைத் திட்டத்தில் பங்கேற்ற 12 பள்ளிகளின் ஆசிரியர்கள், சுவரொட்டிப் பகிர்வுகள்மூலம் மாணவர்களுக்குக் கிடைத்த பயன்களைச் சக தமிழாசிரியர்களிடம் விளக்கினர்.

அவற்றில் நான்கு தொடக்கப் பள்ளிகள், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் உட்பட ஏழு உயர்நிலைப் பள்ளிகள், ஒரு தொடக்கக் கல்லூரி ஆகியவை அடங்கும்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான சிறுகதைகள், தமிழ் முரசு நாளிதழ் செய்திகள், உள்ளூர் எழுத்தாளர்களுடனான சந்திப்புகள் (சிவானந்தம் நீலகண்டன், கனகலதா உள்ளிட்டோர்), தேசிய நூலகக் கற்றல் பயணங்கள் போன்றவை அப்பள்ளிகளின் வாசகர் மன்றங்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகள்.

இத்திட்டம் தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம், பாடத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு, தேசிய நூலக வாரியம் ஆகியவற்றின் இணை முயற்சியாகும்.

அடுத்து, மற்ற கருப்பொருள்கள், வெளிநாட்டு எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் திட்டம் விரிவாக்கப்படும் என்றார் திரு நடேசன்.

கருத்தரங்கில் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிறப்பாய்வு ஆலோசகரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியுமான அருண் மகிழ்நன் சிறப்புரை ஆற்றினார்.

‘தன்னிகரற்ற தலைமைத்துவம் ஒரு மாயை’

கோ சாரங்கபாணி, லீ குவான் யூ போன்ற தலைவர்கள், அறிவான சுற்றத்தினர் இல்லாவிடில் இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டுவந்திருக்க முடியாது என்றார் திரு அருண் மகிழ்நன்.
கோ சாரங்கபாணி, லீ குவான் யூ போன்ற தலைவர்கள், அறிவான சுற்றத்தினர் இல்லாவிடில் இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டுவந்திருக்க முடியாது என்றார் திரு அருண் மகிழ்நன். - படம்: ரவி சிங்காரம்

ஆசிரியர்களை அகழாய்வாளர்களுடன் ஒப்பிட்ட அவர், உண்மையான தகவல்களைப் பொய்யிலிருந்து பிரித்துப் பார்ப்பது அவசியம் என்றார். “மரபைப் பற்றிப் பெருமைகொள்ளும்போது மிகைப்படுத்தாமல் சரியான தகவல்களைக் கொண்டுசேருங்கள்,” என்று அவர் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார்.

“எந்த ஓர் ஒளிவழியைப் பார்த்தாலும் யார் அத்தகவலைக் கூறுவது எனப் பார்த்தபின்பே மாணவர்களிடம் அக்கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள்,” என்றார் திரு அருண். புதுப்புது தகவல்களால் வரலாறு மாறிக்கொண்டே இருப்பதையும் அவர் சுட்டினார்.

மேலும், இன்றைய காலகட்டத்தில் சிலர் ‘தன்னிகரற்ற தலைவர்கள்’ ஆக முயற்சி செய்கிறார்கள்; இதனால் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் சிலர் தங்களால்தான் இந்த அமைப்பு இந்த நிலையில் இயங்கிவருகிறது எனக் கருதுவதாகத் திரு அருண் கூறினார்.

அமரர் லீ குவான் யூ, கோ சாரங்கபாணி ஆகியோரைச் சான்றுகளாகச் சுட்டிய திரு அருண், கோ சாரங்கபாணியுடன் மெ.சிதம்பரம், வை திருநாவுக்கரசு, அ.முருகையன் போன்ற பல திறமைசாலிகளும் இருந்தனர். திரு லீ குவான் யூ உடன் எஸ் ராஜரத்தினம், கோ கெங் சுவீ எனப் பல தலைவர்களும் இருந்தனர் என்றார் திரு அருண்.

தமிழ்ச் சமூகத்தில் செயற்கை நுண்ணறிவைப் பரப்பும் பொறுப்பைத் தமிழாசிரியர்கள் ஏற்கலாம் என்றும் அவர் கருத்துரைத்தார்.

அதற்கு நான்கு, ஐந்து ஆசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் சமூகத்தினருடன் கலந்துரையாடி புத்தாக்கத் திட்டங்களை உருவாக்கலாம். மற்ற அமைப்புகள், வணிகங்கள் பின்னர் அக்குழுவுடன் இணைந்து உதவும் என்றார் திரு அருண் மகிழ்நன்.

“21ஆம் நூற்றாண்டில் இது நமக்கு ஒரு பொற்காலம். நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு முனைப்புக்கும் பெரும்பாலும் அமைச்சிலிருந்து நிதியாதரவு கிடைக்கிறது. நல்ல யோசனைகளைச் செயல்படுத்த முடிகிறது.

“யோசனைகள் பிரம்மாண்டமாக இருக்கலாம். ஆனால், சிறு சிறு வி‌‌ஷயங்களாகத் தொடங்க வேண்டும். சிறுபான்மைச் சமூகமான நம்மிடத்தில் திறன்கள் கொட்டிக் கிடக்கின்றன; ஆனால் சிதறிக் கிடக்கின்றன என்பதையே திரு அருண் கூறியுள்ளார்,” எனத் தமது உரையை நிறைவுசெய்தார் திரு சுப்பிரமணியம்.

குறிப்புச் சொற்கள்