சட்டவிரோத இணையவழி வேலைகளை ஒடுக்கவும், இணையவழி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சினைகளைச் சமாளிக்கவும் சட்டவிரோத வாடகை வாகன சேவைக்கு எதிரான கடுமையான அமலாக்க நடவடிக்கை, தண்டனை உள்ளிட்ட 10 பரிந்துரைகளை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பணிக்குழு வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத தனியார் வாடகை வாகனச் சேவையில் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் எல்லை தாண்டிய சேவை, சிங்கப்பூருக்குள் சேவை வழங்குவது உள்ளிட்டவை அடங்கும். தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் $3,000 வரை அபராதம், ஆறு மாத சிறை விதிக்கப்படும். வாகனமும் பறிமுதல் செய்யப்படலாம்.
சட்டங்கள் கடுமையாக்கப்படலாம் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இச்சேவைத் துறையில், வெளிநாட்டவர் சட்டவிரோதமாகப் பணிபுரிய தமது கணக்கை வழங்குபர் அனைத்து முக்கிய இணையவழி சேவைத் தளங்களில் இருந்தும் ஈராண்டுகளுக்கு தடைசெய்யப்படுவது பரிந்துரைகளில் ஒன்று.
இணையவழி ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட முத்தரப்பு பணிக்குழுவில் மனிதவள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், வாடகை சேவைத் தளமான கிராப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இங்குள்ள கிட்டத்தட்ட 67,600 இணையவழி ஊழியர்களில் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, வெளிப்படையான கட்டண கட்டமைப்பு, ஊக்கத்தொகை திட்டங்களையும் குழு முன்வைத்துள்ளது.
மாதந்தோறும் $1,500 - $ 2,500வரை சம்பாதிக்கக்கூடிய அவர்களின் வருமான நிச்சயமற்ற தன்மையைப் போக்க, வேலை விவரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இணையவழிப் பணிகளை வெளிநாட்டினர் மேற்கொள்வதாகச் சந்தேகித்தால் இணையவழித் தள நிர்வாகிகள் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய தளங்கள், தங்களின் ஊழியர் அடையாளச் சோதனைகளை வழக்கமாக்க வேண்டும். வாடகை வாகனச் சேவைத் துறையில் விதிகளை மீறுவோர் மீதான நடவடிக்கை, அபராதங்களை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும்.
சட்டவிரோத சேவைகளுக்கு உதவும் செயலிகள், தளங்களிலுள்ள விளம்பரங்களை அகற்றவும், இணையச் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தவும் அரசாங்கம் இணையவழி சேவையாளர்களை ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை குழு வைத்துள்ளது.
பரிந்துரைகள் இங்குள்ள, 99 விழுக்காடு இணையவழி ஊழியர்களைக் கொண்டிருக்கும் அமேசான்ஃப்ளெக்ஸ், கம்ஃபர்ட்டெல்குரோ ஜிக், டெலிவரூ, ஃபுட்பாண்டா, கோஜெக், கிராப், லாலாமோவ், ரைடு, டாடா ஆகிய ஒன்பது இணையவழிச் சேவைத் தள நிர்வாகிகளால் கட்டங்கட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று குழு கூறியது.
இணையவழி ஊழியர்கள், முக்கியமாக தனியார் வாடகை வாகனச் சேவை, விநியோக சேவைகளை வழங்குவோர் ஆவர்.
அரசாங்கம், இணையவழிச் சேவை வழங்குவோர், என்டியுசியுடன் இணைந்த மூன்று இணையவழிச் சேவைத் தள சங்கங்களுடன் இணைந்து, சட்டவிரோத வாடகை சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குழு தனது பரிந்துரைகளில் ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதல், நில சோதனைச் சாவடிகள் போன்ற முக்கியமான இடங்களில் நடந்த சோதனைகளில் சட்டவிரோத சேவை வழங்கிய 73 வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பிடிபட்டன.
விதிகளை மீறும் வெளிநாட்டினர் குறித்து புகார் தெரிவிக்க இணையவழி ஊழியர்கள், பொதுமக்களுக்காக தனியான தளம் அமைப்பது குறித்த குழுவில் ஆலோசனை ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கார்களின் சட்டவிரோத சேவைகுறித்து பொதுமக்களும் இணையவழி ஊழியர்களும் தெரிவிக்கலாம். இணையவழிப் பணிகளைச் செய்வதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினர் குறித்து மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தில் புகாரளிக்கலாம்.