விற்பனையாகாத உணவு விரயமாவதைத் தடுத்து, அவற்றிற்கு ‘ஆச்சரியப் பைகள்’ (surprise bags) எனும் பெயரில் மறுவடிவம் கொடுத்து மக்கள் அவற்றை வாங்கி ருசிக்கச் செய்கிறார் திருமதி மஹிமா ராஜாங்கம் நடராஜன், 35.
உணவு மீட்புச் சேவகராக மாறவேண்டும் என்ற திருமதி மஹிமாவின் பயணம், 2021ஆம் ஆண்டு தொடங்கியது. உணவு விரயத்தைத் தடுக்கும் இலக்குடன் தாய்லாந்தில் நிறுவப்பட்ட ‘யிண்டி’ (Yindii) எனும் செயலியின் இணை நிறுவனர் இவர்.
“உணவு வீணாவதைத் தடுக்க, நாம் வாழும் பூமியைப் பாதுகாக்க, உட்கார்ந்து உணவை முழுமையாகச் சாப்பிட்டாலே போதும் என்று எப்போதும் வேடிக்கையாகக் கூறுவதுண்டு,” என்றார் திருமதி மஹிமா.
பாண்டிச்சேரி பூர்வீகம் என்றாலும் இந்திய நாட்டவரான இவர், மணிலாவில் பட்டப்படிப்பு படித்து, தாய்லாந்தில் வாழ்ந்து வருகிறார்.
“இந்தச் செயலி முதன்முதலாக 2021ஆம் ஆண்டு தாய்லாந்தில் நிறுவப்பட்டது. இதன் நிறுவனர் திரு லூயிஸ்-ஆல்பன் படார்ட்-டுப்ரே.
அறிமுகம் கண்ட இரு மாதங்களுக்குப் பிறகு இந்த முயற்சியில் அவருடன் இணைந்தேன்,” என்றார் திருமதி மஹிமா.
உணவு விரயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பசுமையான உலகை அமைத்திடும் ஆற்றலை நல்குதல், உற்பத்தி செய்யப்படும் எந்த உணவும் வீணாவதைத் தடுக்கத் தொடர்ந்து முயலுதல் ஆகியவையே இச்செயலி உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள முக்கிய இலக்குகள்.
‘யிண்டி’ செயலி வாயிலாகக் கடந்த பிப்ரவரி மாதம் வரை 380,000 வகை உணவு வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளதாகத் திருமதி மஹிமா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்குச் செயலி வந்ததன் காரணம்
தாய்லாந்தைத் தொடர்ந்து இச்செயலி 2023ஆம் ஆண்டு ஹாங்காங்கிற்கு விரிவடைந்து, பிறகு 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் அறிமுகம் கண்டது.
உணவகங்கள், அடுமனை உள்ளிட்டவற்றில் விற்பனையாகாமல் இருக்கும் உணவுப் பண்டங்களைக் குறைந்தது 50 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரையிலான கட்டணக்கழிவுடன் வாங்கிக்கொள்ள இச்செயலி துணைபுரிகிறது.
சிங்கப்பூரில் இச்செயலியை நிறுவுவதற்கான நோக்கம் குறித்தும் விளக்கினார் மஹிமா.
உலகெங்கிலும் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வரும் இக்காலத்தில், உணவுத் தேவைக்கான செலவுகளில் கைகொடுக்கும் எண்ணத்துடன் எடுக்கப்படும் முயற்சிகளை மக்கள் பெரும்பாலும் வரவேற்கின்றனர் என்றார் அவர்.
“சிங்கப்பூர் முன்னோக்கிச் செல்லும் பொருளியல். இங்கு உணவு நன்கொடை, நற்சமாரியர் உணவு நன்கொடை சட்டம் என உணவு மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப் பல திட்டங்கள் உள்ளன.
“வர்த்தகர்கள் உணவு வீணாகாமல் காக்கும் வழிகளைத் தேடுகிறார்கள். மக்கள் உணவுக்கான செலவைக் குறைத்துச் சேமிக்கவும் முனைகிறார்கள். எனவே, இந்த காரணங்களால் சிங்கப்பூர் சந்தையில் இச்செயலிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது,” என்று கருத்துரைத்தார் திருமதி மஹிமா.
இச்செயலிக்கு சிங்கப்பூரில் 130,000 பயனர்கள் உள்ளனர்.
Paul (பவுல்), செடில் (Cedele), ஓகே சிக்கன் ரைஸ் (Ok Chicken Rice) உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் உணவை இச்செயலியில் சலுகை விலையில் பயனர்கள் வாங்கலாம்.
மக்கள் கருத்து
“விற்கப்படாமல் மீந்திருக்கும் உணவை மக்கள் இரண்டு வகையாக அணுகுகிறார்கள். ஒரு தரப்பினர் இத்தகைய முயற்சியை ஆதரிக்கிறார்கள். வேறு சிலர் குப்பைக்குச் செல்லவிருக்கும் உணவுதானே எனும் கண்ணோட்டத்தில் பொதுவாக அணுகுவதுமுண்டு,” என்று தெரிவித்தார் திருமதி மஹிமா.
ஆயினும், வீணாக்காமல் மீட்கப்படும் ஒவ்வோர் உணவு மூலமாகவும் சுமார் 2.5 கிலோ கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுத்து சுற்றுச்சூழலைப் பேணலாம் என்று கூறினார் இச்செயலியின் தலைமைச் சந்தைப்படுத்துதல் நிர்வாகியாகவும் உள்ள மஹிமா.
உணவை வீசுவது மட்டுமே உணவுக் கழிவல்ல
உணவு வீணாக்கப்படுவதைத் தடுக்கப் பற்பல வழிகள் வந்துவிட்டன. ஆனால், அக்கறைக்குரிய அம்சம் என்னவென்றால், அது குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததே எனக் கருதுகிறார் திருமதி மஹிமா.
’உணவை வீசுவது மட்டும் உணவுக் கழிவல்ல. ஆனால், அதைவிட பெரியது அந்த உணவை உற்பத்தி செய்வதற்குச் செல்லும் வளங்கள், ஆற்றல், நீர் மற்றும் உழைப்பும் ஆகியவை ஆகும்.
’தீங்கிழைக்கும் வாயு வெளியேற்றத்துக்கு அவை வழிவகுக்கின்றன. மேலும், உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட எண்ணற்ற வளங்களும் வீணாகின்றன,” என்று விளக்கிய திருமதி மஹிமா இதற்கான தீர்வு வீடுகளிலிருந்து தொடங்குகிறது என்றார்.
“யிண்டி பயனர்களை வாடிக்கையாளர் என்று சொல்வதில்லை. ‘ஃபூட் ஹீரோ’ என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம்,” என்று சொன்னார் திருமதி மஹிமா.
உணவு விரயம் பற்றிய விழிப்புணர்வை ஆசியாவில் தீவிரமாகக் கொண்டு சேர்ப்பதிலும் நீடித்த நிலையான உணவு நடைமுறைகளைக் கையாள மக்களை ஊக்குவிப்பதிலும் மும்முரமாகச் செயலாற்றுவதாகக் குறிப்பிட்டார் அவர்.
“ஓர் இல்லத்தில், யாரோ ஒருவர் உள்ளத்தில் உணவு வீணாவதைத் தடுக்கும் நோக்கை விதைத்துள்ளோம் என்ற உணர்வுடன் ஒவ்வொரு நாளையும் கடக்கிறேன். உலகில் உணவு வீணாவதை 100% தடுக்க முடியாது என்றாலும் உணவுப் பொருள்கள் விரயமாவதைத் தடுக்க ஒவ்வொரு நொடியும் 100% போராடுவேன்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திருமதி மஹிமா.


