ஆசியாவில் ஈடுபாட்டை வலுப்படுத்த ஆஸ்திரேலியாவுக்கு மூத்த அமைச்சர் லீ அழைப்பு

ஆசியாவில் ஈடுபாட்டை வலுப்படுத்த ஆஸ்திரேலியாவுக்கு மூத்த அமைச்சர் லீ அழைப்பு

படம்: சாவ்பாவ்

08 Nov 2026 - 6:00 am

2 mins read

ஆசியாவுடன் ஆஸ்திரேலியா அதன் ஈடுபாட்டை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏபிசி தேசிய வானொலி நிலையத்தின் ‘2026 ஏபிசி போயர் விரிவுரைத் தொடர்’ நிகழ்ச்சிக்காகப் பதிவுசெய்த உரையில் அதனை மூன்று வழிகளில் செயல்படுத்தலாம் என்றார் திரு லீ.

அந்த மூன்று வழிகளைப் பற்றியும் அவர் விவரித்தார்.

முதலாவது, தற்காப்பு, பாதுகாப்பு. இந்த வட்டாரத்தில் ஆஸ்திரேலியா தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றார் திரு லீ.

ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், சிக்கலான உறவுகளைக் கொண்ட நாடுகளுடனும் நடைமுறைத் தொடர்புகளைப் பேண வேண்டும். ஏப்பெக், சிபிடிபிபி போன்ற அமைப்புகளை உருவாக்கிய அனுபவத்தைக் கொண்டு, அனைவருக்கும் பலன்தரக்கூடிய வலுவான வட்டாரக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் அது பங்காற்ற இயலும் என்று திரு லீ தெரிவித்தார்.

இரண்டாவது, பொருளியல் இணைப்பு. ஆஸ்திரேலியா அதன் பொருளியலைத் திறந்த நிலையிலும் ஆசியாவுடன் இணைத்திருக்கும் நிலையிலும் வைத்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். தென்கிழக்காசியா, 700 மில்லியன் பேரைக் கொண்ட மாபெரும் சந்தை. ஒட்டுமொத்தமாக இங்கு ஆஸ்திரேலியா முதலிடுவது நியூசிலாந்தைக் காட்டிலும் குறைவு. தென்கிழக்காசியாவில் முதலீடு செய்ய கணிசமான வாய்ப்புகள் உள்ளன. முக்கிய கனிமங்கள், வேளாண், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னிலக்கத் தொழில்நுட்பம் முதலிய துறைகளில் ஆஸ்திரேலியா அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.

இறுதியாக, மக்கள் தொடர்பு. முதலில் தொடங்கப்பட்ட கொழும்புத் திட்டமும் புதிய கொழும்புத் திட்டமும் ஆஸ்திரேலியாவுக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுத் தந்துள்ளது. அத்துடன் நீடித்த நல்லெண்ணம் ஏற்படுவதற்கும் அவை காரணமாயின. காலப்போக்கில், ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஆசியச் சமூகம் உருவாகியுள்ளது. மக்களுக்கு இடையிலான இத்தகைய தொடர்புகள் ஆஸ்திரேலியாவையும் ஆசியாவையும் மேலும் நெருக்கமாக்கும் என்றார் திரு லீ.

ஆசியா பசிபிக் வட்டாரத்தில் ஆஸ்திரேலியாவின் வரலாறு

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஈடுபாடு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தொடங்கியதாக மூத்த அமைச்சர் லீ தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த வட்டாரத்தில் நடந்த பல பெரிய சண்டைகளில் ஆஸ்திரேலியா முக்கியப் பங்காற்றியுள்ளது. தென்கிழக்காசியாவில் ஆஸ்திரேலியப் படையினர் துணிவுடன் போரிட்டனர், பலர் உயிர் துறந்தனர். சாங்கி சிறையின் தியாக வரலாறு தொடங்கி, 1971ல் அமைக்கப்பட்ட ஐந்ததிகார பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அர்ப்பணிப்பு நீடிக்கிறது. வர்த்தகத்தில், தொடக்கத்தில் பிரிட்டனைச் சார்ந்திருந்த ஆஸ்திரேலியா, பின்னர் ஆசியாவின் முக்கியப் பொருளியல் பங்காளியாகவும் உருவெடுத்தது.

ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும்

பரப்பளவில் வேறுபட்டாலும், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளில் ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் ஒன்றுபடுகின்றன. சட்டங்களிலும் சமூக விதிமுறைகளிலும் சில வேறுபாடுகள் இருந்தாலும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும் ஒருமித்த நம்பிக்கையும் நட்புறவையும் வளர்த்துக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார் மூத்த அமைச்சர் லீ.

குறிப்புச் சொற்கள்