உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம் அதிகரிக்கும் வேளையில் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளின் மாற்றத்தால் தென்கிழக்காசிய வட்டாரம் குறுகியகால நன்மை அடைந்தபோதும் பதற்றம் அதிகரித்தால் பாதகமான சூழல் ஏற்படும் அபாயம் இருப்பதாக சிங்கப்பூர் நாணய் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் எச்சரித்துள்ளார்.
குறுகிய காலத்திற்கு வட்டாரப் பொருளியல் வளர்ச்சி காணும் என்றாலும் அதன் நீண்டகாலத் தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
குறிப்பாக, தன்னைப்பேணித்தனக் கொள்கைகளால் பாதகம் நேரக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.
வருடாந்தர சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப விழாவுக்கு முன்பாக பிஸ்னஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் திரு சியா இவ்வாறு கருத்துரைத்தார்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு திரு சியா அளித்த முதல் ஊடக நேர்காணல் இது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்களால் விநியோகச் சங்கிலி அடையும் மாற்றங்கள் தென்கிழக்காசியாவுக்கு நன்மை அளித்ததை அவர் சுட்டினார்.
அந்தப் பதற்றங்களால் சீனா வளரும் நாடுகளுடன் அதிக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அமெரிக்கா, மெக்சிகோவுடனும் வியட்னாமுடனும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் பன்முகமயமாதலைப் பின்பற்றுகின்றன. தென்கிழக்காசியாவில் கூடுதலான உற்பத்தி நடவடிக்கைகளை அவை மேற்கொள்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், நீண்டகால அடிப்படையில் சில அபாயங்களைக் கண்காணிக்க வேண்டும் என்றார் திரு சியா. தன்னைப்பேணித்தனக் கொள்கைகள் அதிகரிக்கும் நிலையில் அவற்றால் உலகளாவிய வளர்ச்சியும் பணவீக்கமும் பாதிக்கப்படக்கூடும் என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் தேர்தல், மத்திய கிழக்குப் பூசல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை அவர் சுட்டினார்.

