கப்பல் எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்கும் விதமாகக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் பழைய உத்தி ஒன்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன.
‘ஸ்லோ ஸ்டீமிங்’ எனப்படும் அந்த உத்தியின்கீழ், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காகச் சரக்குக் கப்பல்கள் வழக்கத்தைவிட மெதுவாக இயங்கும்.
இதனால், அண்மைய வாரங்களில் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியத் துறைமுகங்களுக்கு வந்தடைந்த கப்பல்களின் எண்ணிக்கை குறைந்தது.
இது வர்த்தக இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால் உலகளாவிய பொருளியல் பாதிப்படக்கூடும்.
ஆசியா முழுவதும் துறைமுகங்களில் கப்பல்கள் காத்திருக்கும் நேரம் குறைந்திருப்பதாகக் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.
எடுத்துக்காட்டாக, கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர்த் துறைமுகத்தில் கப்பல்கள் 3.5 நாள் காத்திருக்க நேரிட்டது. இப்போது அது ஒருநாள் அல்லது அதற்குக்கீழ் எனக் குறைந்துள்ளது.
சில கப்பல்கள் அவற்றின் இடைவழிப் பயண நேரத்தைக் கூட்டியுள்ளதாகத் தெரிவதாகவும் இது அவை ‘ஸ்லோ ஸ்டீமிங்’ நடைமுறையைக் கடைப்பிடிப்பதைக் காட்டுவதாகவும் விநியோகச் சங்கிலி மேலாளர்கள் தெரிவித்தனர்.
ஒரு கப்பலின் வேகத்தைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும். ஆனால், பயண நேரம் கூடும். இதனால், உலகளாவிய வர்த்தகம் மெதுவடையும்; உலகப் பொருளியல் வளர்ச்சியும் பாதிப்படையும்.
தொடர்புடைய செய்திகள்
உலகச் சரக்கு வர்த்தகத்தில் 90 விழுக்காடு கப்பல் போக்குவரத்தைச் சார்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் அதன் மதிப்பு ஆக அதிகமாக 35 டிரில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது. ஆனால், கப்பல்கள் மெதுவாக இயக்கப்படுவதால் இப்போது அது வீழ்ச்சியடையக்கூடும் என்று கருதப்படுகிறது.
இவ்வேளையில், சிங்கப்பூரில் துறைமுக நடவடிக்கைகள் நிலையாக இருப்பதாக ‘பிஎஸ்ஏ சிங்கப்பூர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. முனைப்பான திட்டமிடல், கப்பல் நிறுவனங்களுடனும் பங்காளித்துவ அமைப்புகளுடனும் அணுக்கமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் ஆதரவால் அது சாத்தியமானதாகக் கூறப்பட்டது.
தங்கள் துறைமுகத்தில் அணையும் சரக்குக் கப்பல்கள் அனைத்திற்கும் நம்பகமான சேவை, செயலாக்கத் திறன், இடையூறில்லாத தொடர்பு ஆகியவற்றை உறுதிசெய்வதற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.

