எரிசக்தி மீள்திறனை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், மூப்படையும் சமூகத்தைப் பராமரித்தல் ஆகியவற்றில் சிங்கப்பூரும் சீனாவும் தொடர்ந்து ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாவ்பாவ் நாளிதழின் ஏற்பாட்டில் எட்டாம் ஆண்டாக நடைபெற்ற சிங்கப்பூர்-சீனா கருத்தரங்கில் திங்கட்கிழமை (ஜூலை 6) உரையாற்றிய திரு சீ, எதிர்காலத்தை வடிவமைக்கும் சவால்கள் பெரும்பாலும் பல நாடுகளாலும் பகிரப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இத்தகைய பங்களிப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் பாடங்களும் உருவாக்கப்படும் தீர்வுகளும் மற்ற நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமையும்,” என்றார் அவர்.
புதுப்பிக்கத்தக்க, தூய்மையான எரிசக்தித் தொழில்நுட்பங்களில் மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல் (Robotics) மற்றும் அறிவார்ந்த உற்பத்தி ஆகிய பிரிவுகளில் சீனா முன்னணியில் உள்ளது என்றார் திரு சீ.
“புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதல், பணிபுரியும் முறையை மேம்படுத்துதல், உருவாக்கப்படும் புதிய பணிகளுக்கு நம் ஊழியர்களைத் தயார்ப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் விதம் குறித்து அறிதல் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் அமைச்சர்.
அத்துடன், மூப்படையும் சமூகத்தைப் பாதுகாப்பது குறித்து அவர் மற்றொரு கருத்தைக் குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரர்கள் நால்வரில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பார். அதேவேளை, சீன நாட்டினர் ஐவரில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பார்.
இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றம் இரு சமூகங்களையும் மிக மூப்படைந்த சமூகமாக மாற்றுகிறது என்று திரு சீ கூறினார்.
“வீடு, போதுமான பராமரிப்பு மற்றும் ஆதரவைச் சிங்கப்பூரின் மூத்த குடிமக்களுக்காக வலுப்படுத்தியுள்ளோம். சீனாவும் இதேபோன்ற முன்னேற்றங்களை அடைந்துள்ளது,” என்றார் அவர்.
குறிப்பாக, அமெரிக்க-சீன உறவுகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடையே முடிந்தவரை புரிதலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஊக்கமளித்தார்.
“பெருகிவரும் சிக்கல்கள் நிறைந்த உலகில் இதுபோன்ற கூட்டாண்மைகள் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் பாலங்களாகத் திகழ்கின்றன,” என்றார் அமைச்சர்.
சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இருவரின் நேரடிச் சந்திப்பு கடந்த மே மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
ஈரான் போர், வர்த்தகம் மற்றும் தைவான் சார்ந்த பூசல் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினார்கள்.
கருத்தரங்கில் பேசிய எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், “உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பரிமாற்றங்களுடன் ஆழமாக ஒருங்கிணைந்த நாடான சிங்கப்பூரைப் பொறுத்தவரை அமெரிக்க-சீன உறவுகளில் ஏற்படும் முன்னேற்றங்களை எப்போதுமே கவனித்து வருகிறோம்,” என்று கூறினார்.
கடந்த ஆண்டு 35வது முறையாகத் தூதரக உறவுகளின் நிறைவைக் கொண்டாடிய சிங்கப்பூரும் சீனாவும் நீண்ட காலமாக வலுவான உறவுகளைப் பேணி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இது நாம் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஓர் உறவு,” என்றார் திரு சான்.

