தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலையற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்-சீனா உறவு முன்பைவிட முக்கியத்துவம் பெறுகிறது: வோங்

2 mins read
f781f324-dafb-4986-923e-fb7204626db1
சீன நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்கைச் (வலது) சந்தித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ராய்ட்டர்ஸ்

உலகச் சூழல் களேபரமாக நிலையற்றிருக்கும் வேளையில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு முன்பைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) கூறினார்.

“எல்லா நாடுகளும் பலனடைய பலதரப்புகள் ஒன்றாகச் செயல்படும் அணுகுமுறையையும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் உலக நடைமுறைகளையும் வலுப்படுத்துவதற்கு நெருங்கிய தொடர்புகளை உருவாக்கவும் வட்டார, பலதரப்பு அம்சங்களில் ஒத்துழைக்கவும் நாம் ஒன்றாகச் செயல்படலாம்,” என்று திரு வோங் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் தடையற்ற வர்த்தகத்துக்கு உகந்த சூழல் இருந்துவந்துள்ளது. ஆனால், பெரும்பாலான நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரிவிதித்திருப்பதைத் தொடர்ந்து தடையற்ற வர்த்தகச் சூழலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகைய நேரத்தில் திரு வோங்கின் சீனா பயணம் அமைந்துள்ளது.

“இருநாட்டு மக்களும் கூடுதல் நன்மையடைய, களேபரமான தற்போதைய அனைத்துலகச் சூழலில் சீனா, சிங்கப்பூருடனான ஒத்துழைப்பையும், ஒத்துழைப்பு சார்ந்த தொடர்புகளையும் வலுப்படுத்த ஒப்புக்கொள்கிறது, சவால்களைக் கையாள இணைந்து செயல்பட விரும்புகிறது,” என்று திரு ஸி, திரு வோங்கிடம் கூறினார்.

இதற்கு முன்பு இரு தலைவர்களும் பெரு தலைநகர் லிமாவில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் சந்தித்தனர். ஏபெக் மாநாட்டில் பங்கேற்றபோது இருவரும் சந்தித்தனர்.

திரு வோங் சீனாவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவப் பயணம் இது.

இப்பயணம், பிரதமராக திரு வோங் தென்கிழக்காசியாவுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டுக்கு மேற்கொண்டுள்ள முதல் அறிமுகப் பயணமாகும். இதுவே சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருங்கிய, வலுவான பங்காளித்துவத்தைப் பிரதிபலிப்பதாக திரு வோங், திரு ஸியிடம் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்