உணவு ஆய்வில் $138 மில்லியன் முதலீடு செய்யச் சிங்கப்பூர் உறுதி

உணவு ஆய்வில் $138 மில்லியன் முதலீடு செய்யச் சிங்கப்பூர் உறுதி

படம்: சாவ்பாவ்

27 Oct 2026 - 1:18 pm

2 mins read

சிங்கப்பூர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உணவு ஆய்வு, மேம்பாட்டுக்காக $138 மில்லியனை முதலீடு செய்யவுள்ளது.

பருவநிலை தொடர்பான ஆபத்துகள், உலகளாவிய விநியோகத் தடைகளுக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்துவதில் இனி கவனம் செலுத்தப்படும்.

இந்த நிதியுதவியுடன், சிங்கப்பூர் உணவு அமைப்பு, தரவு, மாதிரியாக்கத்தைப் பயன்படுத்தி இத்தகைய ஆபத்துகளைச் சிறப்பாகக் கணிப்பதற்கான ஆய்வுகளுக்கு ஆதரவளிக்கும்; அத்துடன் உணவின் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கவும் இருப்பு நிர்வாகத்தைச் சீரமைக்கவும் உதவுகின்ற தொழில்நுட்பங்களை உருவாக்கும்.

தற்போதுள்ள நான்கு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளுக்கு உணவு அமைப்பு ஆதரவளிக்கும். நீர்வாழ் உயிரின வளர்ப்பு, வேளாண், எதிர்கால உணவுவகைகள், உணவுப் பாதுகாப்பு ஆகியவையே அந்தத் துறைகள்.

பருவநிலை மாற்றமும் மற்றச் சவால்களும் உணவு உற்பத்திக்குக் கூடுதல் நெருக்குதலை ஏற்படுத்துவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

“அதனால் வேளாண் துறை, உற்பத்தித் திறன் கொண்டதாக மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு நிலையானதாகவும் மீள்திறன் கொண்டதாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்,“ என்றார் அவர்.

சன்டெக் மாநாட்டு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற ஆசிய-பசிபிக் வேளாண் உணவுப் புத்தாக்க உச்சநிலை மாநாட்டில் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி ஃபூ முதன்மையுரை ஆற்றினார்.

தற்போதைய புகைமூட்டச் சூழலைக் குறிப்பிட்ட அவர், பருவநிலை மாற்றம் என்பது தொலைவில் உள்ள சவால் அன்று, மாறாக இப்போதே இவ்வட்டாரத்தைப் பாதித்துவருவதை நினைவூட்டுகிறது என்றார்.

சிங்கப்பூர் தனது உணவுத் தேவையில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

உள்நாட்டிலேயே அதிக உணவை உற்பத்தி செய்வதன் மூலம் மட்டுமே உலகளாவிய தடைகளிலிருந்து நாம் தப்பித்துவிட முடியாது என்றும் பன்முகத்தன்மையும் மாற்றியமைக்கக்கூடிய தன்மையும் கொண்ட உணவு முறையை நாம் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

‘சிங்கப்பூர் உணவு வரலாறு 2’ என்ற புத்துயிர் ஊட்டப்பட்ட உத்தி, நாட்டின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு வழிகாட்டுகிறது என்றார் அவர்.

சிங்கப்பூரின் ‘ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2030’ எனும் திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்படுகிறது. முன்னதாக, 2020ஆம் ஆண்டில் $144 மில்லியனும் 2025ல் $165 மில்லியனும் உணவு ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டன.

இதற்கிடையே, வெப்பமண்டல நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த வேளாண் உணவு நிறுவனமான ஜாஃபாவுடன் சிங்கப்பூர் உணவு அமைப்பு ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

நீர்வாழ் உயிரின சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு நோய்க் கண்காணிப்பு, பண்ணை நிர்வாகம் ஆகியவற்றில் நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க இவ்விரு அமைப்புகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்