சீனாவில் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிபுணத்துவ சிகிச்சை மருத்துவமனை

2 mins read
1c1a45dd-7e6b-4e83-b37d-8b71ba4d25b5
டியான்ஜினில் உள்ள பெரினியல் பொது மருத்துவமனையில் 500 படுக்கைகள் உள்ளன. - படம்: பெரினியல் ஹோல்டிங்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூரில் சொத்துச்சந்தை, சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் ஈடுபடும் நிறுவனமான பெரினியல் ஹோல்டிங்ஸ், சீனாவில் உயர்நிலை, சிறப்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையின் முழு உரிமையாளர் என்ற தகுதியைப் பெற்றுள்ளது.

டியான்ஜின் நகரில் உள்ள அதன் மருத்துவமனைக்குச் சீன அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

சீனாவில் இவ்வாறு ஒரு மருத்துவமனையின் முழு உரிமையைப் பெறும் முதல் வெளிநாட்டு நிறுவனம் என்ற சிறப்பு அதைச் சாரும்.

பெய்ஜிங், டியான்ஜின் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் சீனா அறிவித்தது.

டியான்ஜின் நகராட்சி சுகாதார ஆணையம், 500 படுக்கைகளைக் கொண்ட பெரினியல் பொது மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக, பெரினியல் நிறுவனம் டிசம்பர் 16ஆம் தேதி தெரிவித்தது. பலதுறை சிறப்பு சிகிச்சைக்கான அந்த மருத்துவமனை விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும் அது கூறியது.

ஸிச்சின் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்த மருத்துவமனை ஒரு பில்லியன் யுவான் (185 மில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்பட்டுள்ளது.

பகிர்வு மருத்துவத் தளம் என்ற முறையில் இயங்கும் அந்த மருத்துவமனையில் மருத்துவர்களும் மருத்துவக் குழுமங்களும் சிகிச்சை வழங்க முடியும்.

அவர்கள் மருத்துவ வசதிகள், சேவைகளுக்காக முதலீடு எதுவும் செய்யத் தேவையில்லை.

பெரினியல் பொது மருத்துவமனையின் பகிர்வு முறையிலான மருத்துவ வசதிகளையும் சேவைகளையும் பயன்படுத்தி அவர்கள் சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்க இயலும். மேம்பட்ட வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறைகள், நோயைக் கண்டறியும் கருவிகள், பரிசோதனைக்கான ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றை மருத்துவர்கள் பகிர்வு முறையின்கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலும்பியல், கண் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், சிறுநீரகவியல், நோயெதிர்ப்பியல், இதயவியல், புற்றுநோயியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணத்துவ மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் சேவை வழங்குவர்.

பெரினியல் பொது மருத்துவமனை, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நடுவமான பெரினியல் டியான்ஜின் தெற்கு அதிவேக ரயில்வே அனைத்துலகச் சுகாதாரப் பராமரிப்பு, வர்த்தக நகரின் (PIHBC Tianjin) ஓர் அங்கமாக அமைக்கப்பட்டுள்ளது. டியான்ஜின் சவுத் அதிவேக ரயில் (HSR) நிலையத்திற்கு அருகே அது அமைந்துள்ளது.

சீனாவின் டியான்ஜின் நகரில் உள்ள பெரினியல் டியான்ஜின் தெற்கு அதிவேக ரயில்வே அனைத்துலகச் சுகாதாரப்பராமரிப்பு, வர்த்தக நகர் (PIHBC Tianjin).
சீனாவின் டியான்ஜின் நகரில் உள்ள பெரினியல் டியான்ஜின் தெற்கு அதிவேக ரயில்வே அனைத்துலகச் சுகாதாரப்பராமரிப்பு, வர்த்தக நகர் (PIHBC Tianjin). - படம்: பெரினியல் ஹோல்டிங்ஸ்

அந்த ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நடுவத்தில் (PIHBC Tianjin), 200 படுக்கைகள் கொண்ட பெரினியல் மறுவாழ்வு மருத்துவமனை டியான்ஜின், 300 படுக்கைகள் கொண்ட எபெர் பெரினியல் மூளையியல் மருத்துவமனை டியான்ஜின், 300 படுக்கைகள் கொண்ட பெரினியல் தாதிமை மருத்துவமனை டியான்ஜின், 1,800 படுக்கைகள் கொண்ட பெரினியல் முதியோர் பராமரிப்பு நிலையம், மொத்தம் ஏறத்தாழ 1,000 படுக்கைகள் கொண்ட நான்கு ஹோட்டல்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்