12 பேருக்குத் தட்டம்மை; புதிய விதிமுறைகள் அறிவிப்பு

சமூகத்தில் தொற்றுப் பரவலுக்கான சான்றுகள் இல்லை என தொற்றுநோய் அமைப்பு கூறியது

12 பேருக்குத் தட்டம்மை; புதிய விதிமுறைகள் அறிவிப்பு

2 mins read
600de9f2-0b72-4bc0-a1e7-6f89ebd03510
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 24 வரை 12 பேருக்கு தட்டம்மை (Measles) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: கெட்டி இமேஜஸ்

சிங்கப்பூரில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 24 வரை 12 பேருக்கு தட்டம்மை (Measles) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஆண்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தட்டம்மை பரவலைக் கட்டுப்படுத்த திருத்தப்பட்ட பொது சுகாதார நடைமுறைகளைச் செயல்படுத்தப்போவதாகத் தொற்றுநோய் அமைப்பு (Communicable Diseases Agency (CDA)) செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போட இன்னும் தகுதி பெறாத (12 மாதங்களுக்குட்பட்ட) இரு குழந்தைகளும் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போட இன்னும் தகுதி பெறாத (12 மாதங்களுக்குட்பட்ட) இரு குழந்தைகளும் அடங்குவர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பாதிக்கப்பட்ட 12 பேரும் சிங்கப்பூரில் வசிப்பவர்கள். அவர்களில் ஆறு பேர் அண்மையில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்கள்.

குறிப்பாக, 11 பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். இதில் தடுப்பூசி போட இன்னும் தகுதி பெறாத (12 மாதங்களுக்குட்பட்ட) இரு குழந்தைகளும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களில் 8 பேருக்கு இடையிலான வைரஸ் மரபணுக்கள் வெவ்வேறானவை, நால்வர் ஒரு குறிப்பிட்ட குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது.

சமூகத்தில் இது பெரிய அளவில் பரவவில்லை என்ற அமைப்பு, விரிவான தொற்றுநோயியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டது.

உலகளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1 முதல் மேம்படுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் நடப்புக்கு வரும் என்று தொற்றுநோய் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1 முதல் மேம்படுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் நடப்புக்கு வரும் என்று தொற்றுநோய் அமைப்பு தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: சாவ்பாவ்

தட்டம்மை பரவலைத் தடுக்க புதிய சுகாதார நடவடிக்கைகள்

தட்டம்மை அறிகுறி உள்ளவர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை தொடரும்.

பரிசோதனை முடிந்து நோய்த்தொற்று இல்லை என உறுதியாகும்வரை பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொற்று ஏற்பட வாய்ப்புள்ள நெருங்கிய தொடர்பாளர்களுக்கு இனி கட்டாயத் தனிமைப்படுத்தல் கிடையாது. மாறாக, தொற்று அபாயத்தைக் குறைக்க அவர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.

அதிக அபாயம் உள்ள இடங்களில் பணியாற்றுபவர்கள், தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்திருந்தால், 21 நாள்கள் வரை விடுப்பில் இருக்க அல்லது மாற்றுப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்படுவர்.

தட்டம்மை எளிதில் பரவக்கூடியது என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி விவரங்களைச் சரிபார்ப்பது அவசியம்.

“உலகளவில் தட்டம்மை அதிகரிப்பதால் சிறிய அளவிலான பாதிப்புகள் அவ்வப்போது ஏற்படலாம்; எனினும், சிங்கப்பூரில் அதிக தடுப்பூசி பயன்பாடும் சமூக எதிர்ப்பு சக்தி ஆற்றலும் இருப்பதால், பெரிய அளவில் பரவ வாய்ப்பில்லை,” என்று தொற்றுநோய் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்