சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி: முன்னுரைப்பைக் குறைத்த ‘ஐஎம்எஃப்’

2 mins read
a1604498-7443-4b8e-a9cf-dbb3ff3e52ac
கோப்புப் படம்: - ஏஎஃப்பி

இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பை அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்) குறைத்துக்கொண்டுள்ளது.

சிங்கப்பூர் மட்டுமின்றி இதர ஆசியான் வட்டார நாடுகளுக்கான வளர்சசி முன்னுரைப்பையும் அனைத்துலகப் பண நிதியம் குறைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலக நாடுகள் மீது வரி விதித்திருப்பதையும் அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் மோசமடைவதையும் தொடர்ந்து பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறைக்கப்பட்டுள்ளதாக நிதியம் குறிப்பிட்டது.

அந்த வகையில், இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி விகிதம் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த விகிதம் 4.4 விழுக்காடாக இருந்தது என்று அனைத்துலகப் பண நிதியம், வியாழக்கிழமை (ஏப்ரல் 24) வெளியிட்ட அதன் உலகப் பொருளியல் நிலவர அறிக்கையில் (World Economic Outlook Report) தெரிவித்தது.

இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் 2.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று அனைத்துலகப் பண நிதியம் சென்ற ஆண்டு முன்னுரைத்திருந்தது.

சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி விகிதம், இவ்வாண்டு பூஜ்யத்திலிருந்து இரண்டு விழுக்காட்டுக்குள் பதிவாகும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு சில நாள்களுக்கு முன்புதான் கணித்தது. முன்னதாக அமைச்சு, வளர்ச்சி விகிதம் ஒன்றிலிருந்து மூன்று விழுக்காட்டுக்குள் பதிவாகும் என்ற முன்னுரைத்திருந்தது.

அனைத்துலகப் பண நிதியம், இவ்வாண்டு ஆசியான் வட்டாரத்தின் பொருளியல் 4.1 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைத்துள்ளது. சென்ற ஆண்டு இந்த விகிதம் 4.8 விழுக்காடாகப் பதிவானது. மேலும், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி விகிதம் இதைவிட 0.6 விழுக்காடு அதிகமாக முன்னுரைக்கப்பட்டது.

அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப், உலக நாடுகள் மீது வரிவிதித்தார். பின்னர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வாய்ப்பளிக்க அவர் அந்த வரிவிதிப்பை 90 நாள்களுக்கு ஒத்திவைத்தார்.

குறிப்புச் சொற்கள்