இந்தோனீசியப் பிரபலங்களைச் சந்திக்கவில்லை: சிங்கப்பூர்த் தூதரகம் மறுப்பு

இந்தோனீசியப் பிரபலங்களைச் சந்திக்கவில்லை: சிங்கப்பூர்த் தூதரகம் மறுப்பு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 12:02 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள் இருவர், சிங்கப்பூர்த் தூதரின் இல்லத்திற்குச் சென்றதாக வெளியான செய்தியை ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் மறுத்துள்ளது.

முன்னாள் வெளியுறவுத் துணை அமைச்சர் டினோ பட்டி ஜலால், அரசியல் ஆய்வாளர் சைஃபுல் முஜானி ஆகியோரே அந்தப் பிரபலங்கள் என்று சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்த் தூதரகம் இந்த விவகாரம் தொடர்பாகத் திங்கட்கிழமை (அக்டோபர் 25) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“அப்படிப்பட்ட எந்த ஒரு வகையும் நடைபெறவில்லை. இது ஒரு அப்பட்டமான பொய்த்தகவல். இதைச் சரிசெய்ய, இந்தோனீசியாவின் தொடர்பு, மின்னிலக்க விவகார அமைச்சுடன் இணைந்து செயல்படுவோம்,” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தோனீசியச் சொத்துகளை மலிவாக வாங்குவதற்காக, பங்குச் சந்தையில் இந்தோனீசியாவின் தரநிலையைக் குறைக்குமாறு உலகளாவிய குறியீட்டு வழங்குநரான ‘எம்எஸ்சிஐ’க்குச் சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமும் தெமாசெக்கும் அழுத்தம் கொடுத்ததாக அண்மையில் குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் இந்தப் புதிய விவகாரம் கிளம்பியுள்ளது.

இந்தோனீசியாவின் முன்னாள் வர்த்தக அமைச்சர் முஹம்மது லுட்ஃபி அந்தக் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். அது தொடர்பாக முன்னாள் வெளியுறவுத் துணை அமைச்சர் டினோ கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 18ஆம் தேதி மாலையில், பிரபலங்கள் இருவர், சிங்கப்பூர் தூதர் குவோக் ஃபூக் செங்கின் இல்லத்திற்குச் சென்றதாகச் சமூக ஊடகப் பதிவுகள் பரவின.

ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்திற்கு வெளியே உள்ள பகுதியைக் காட்டும் காணொளிகள், சில பதிவுகளில் இடம்பெற்றிருந்தன.

குறிப்புச் சொற்கள்