தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவிற்கு மனிதநேய உதவியை அதிகப்படுத்தும் சிங்கப்பூர்

2 mins read
8e42b176-5480-4ada-923a-a01d54b6184f
கரெம் அபு சலேம் வழியாக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) காஸாவிற்கு உதவிப்பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள். - படம்: ஏஎஃப்பி

காஸாவில் முதற்கட்ட அமைதித் திட்டம் நடப்பிற்கு வந்துள்ளதை அடுத்து, அவ்வட்டாரத்திற்கான மனிதநேய உதவியை அதிகப்படுத்துவது குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.

அதன் தொடர்பில் பாலஸ்தீன அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புதன்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதுபற்றி திரு ஆங் வெய் நெங் (வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி), திரு ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் (சுவா சூ காங் குழுத்தொகுதி), ஜெரால்ட் கியம் (அல்ஜுனிட் குழுத்தொகுதி) ஆகிய எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியபோது டாக்டர் விவியன் இதனைத் தெரிவித்தார்.

தேவையான அளவில் மனிதநேய உதவிகளை வழங்குவதற்குக் காஸாவிற்கான தரைவழிகள் திறக்கப்படுவது மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

“அவ்வட்டாரப் பங்காளிகளுடன் இணைந்து காஸாவிற்கு அதிகமான மனிதநேய உதவிகளை வழங்குவது குறித்து உறுதியாக ஆராய்வோம். அதே நேரத்தில், நிலம் வழியாக காஸாவிற்கு உதவிப்பொருள்கள் எளிதாகச் சென்றுசேர இஸ்ரேலும் தன் பங்கை ஆற்றும் என்றும் எதிர்பார்க்கிறோம்,” என்றார் டாக்டர் விவியன்.

கடந்த ஈராண்டுகளில் உதவிப்பொருள்களை விநியோகிக்க எகிப்தின் செம்பிறை, ஜோர்தானின் ஹேஷ்மைட் அறநிறுவனமும் உலக உணவுத் திட்டம், சில எகிப்திய மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்பட்டு வந்துள்ளதையும் அவர் சுட்டினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்ச காஸா அமைதித் திட்டத்தின் முதற்கட்டமாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போர்நிறுத்தத்திற்கு இணங்கின.

அத்திட்டத்தின்படி, தொடக்கத்தில் பாலஸ்தீனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய இடைக்காலக் குழு காஸாவை நிர்வகிக்கும். அக்குழுவை அதிபர் டிரம்ப் தலைமையிலான ‘அமைதிக் கழகம்’ கண்காணிக்கும்.

இந்நிலையில், அந்தத் தற்காலிகக் குழுவுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்படுவது குறித்து இப்போதே விவாதிப்பதற்கில்லை என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.

இப்போதைக்கு, பாலஸ்தீன அதிகாரிகளுடன் இணைந்து அதிகம் செயல்படவே சிங்கப்பூர் விரும்புகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“கட்டமைப்புத் திட்டங்கள், தொழில்நுட்ப உதவி, அண்மைக்காலத்தில் உபகாரச் சம்பளம் என கடந்த பல ஆண்டுகளாகவே அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்று அவர் விளக்கினார்.

மேலும், தனிநாடு என்ற அவர்களின் இலக்கு ஈடேறும் வகையில், பாலஸ்தீன அதிகாரிகளுடனான அந்த இருதரப்புச் செயல்பாட்டை அதிகப்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றும் டாக்டர் விவியன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்