சான் ஃபிரான்சிஸ்கோ: சீனாவைச் சேர்ந்த இருவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முறைகளில் உபயோகிக்கப்படும் மில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புகொண்ட உணர்திறன் வாய்ந்த நுண்சில்லுகளை அவர்கள் சிங்கப்பூர், மலேசியாவழி சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் ஏற்றுமதி செய்ததாக நம்பப்படும் நுண்சில்லுகளில் என்விடியா எச்100 (Nvidia H100) நுண்சில்லுகளும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
யாங் ஷிவெய், கெங் சுவான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை அமைச்சு தெரிவித்ததாக மதர்ஷிப் ஊடகம் தகவல் வெளியிட்டது. இருவருக்கும் வயது 28. இருவரும் இம்மாதம் இரண்டாம் தேதி கலிஃபோர்னியாவில் கைது செய்யப்பட்டனர்.
ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு சீர்திருத்தச் சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, ஒரு மில்லியன் டாலர் (1.3 மில்லியன் வெள்ளி) வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சந்தேக நபர்கள் இருவரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. கலிஃபோர்னியாவின் எல் மொன்டெ பகுதியில் உள்ள ஏஎல்எக்ஸ் சல்யூஷன்ஸ் இன்க் (ALX Solutions Inc.) எனும் தங்களின் நிறுவனத்தின் வாயிலாக அவர்கள் சம்பந்தப்பட்ட பொருள்களைச் சீனாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுபோல் அந்நிறுவனத்தின் மூலம் 20க்கும் அதிக முறை சிங்கப்பூர், மலேசியாவழி பொருள்கள் சட்டவிரோதமாக சீனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடும் என்று கூடுதல் விசாரணையில் தெரியவந்தது.

