அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்குப் புதிய வரிகளை அறிவித்ததை அடுத்து, பிப்ரவரி 2ஆம் தேதி, சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சரிந்தது. பங்குகளின் விலையும் வீழ்ச்சி கண்டது.
இது, பொருளியல் வளர்ச்சி, பணவீக்கம், புவிசார் அரசியல் எனப் பலவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்குப் பதிலடியாக சீனா, கனடா, மெக்சிகோ மூன்றும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதித்துள்ளன.
திரு டிரம்ப் அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் வரி விதிப்பது குறித்துப் பரிசீலிக்கும் நிலையில், வர்த்தகப் போர் விரிவடைவதால் உலகளாவிய நிலையில் வர்த்தகமும் வளர்ச்சியும் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வரிகள் மறைமுகமாக சிங்கப்பூரைப் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
சிங்கப்பூர்ப் பொருளியல் சிறியது, மிகவும் வெளிப்படையானது என்பதுடன் இதன் வளர்ச்சி வெளிநாட்டுத் தேவை சார்ந்தது என்பதால், உலகளாவிய வளர்ச்சிக்கு நேரும் எந்தப் பாதிப்பும் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை அவர்கள் சுட்டினர்.
திரு டிரம்ப் பதவி ஏற்ற சூட்டோடு வரிகளை அறிவித்தது உலகெங்கும் பங்குச் சந்தைகளை உலுக்கிய வேளையில் இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நீண்ட நாள் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஆண்டின் பிற்பாதியில் வரிகள் அமலுக்கு வரக்கூடும் என்று கருதப்பட்டது. அப்படியின்றி வரிகள் பிப்ரவரி 4ஆம் தேதி நடப்புக்கு வரும் என்பதை அவர்கள் சுட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியலான சீனா, சிங்கப்பூரின் முன்னணி வர்த்தகப் பங்காளித்துவ நாடாகும். சிங்கப்பூர் நிறுவனங்களும், ‘ஜிஐசி’, தெமாசெக் போன்ற முதலீட்டு நிறுவனங்களும் சீனாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்துள்ளன. எனவே சீனப் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் அது சிங்கப்பூரையும் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
இருப்பினும் அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க சீனா ஆதரவுத் திட்டங்களை அமல்படுத்தும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடன் சிங்கப்பூருக்கு நேரடி வர்த்தக நடவடிக்கைகள் குறைவு. இருப்பினும் அமெரிக்கா சிங்கப்பூருக்கு இரண்டாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடாக விளங்குகிறது. எனவே, அமெரிக்கப் பொருளியலுக்கு ஏற்படும் பாதிப்பும் சிங்கப்பூரைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

