சிங்கப்பூரில் வீசவிருக்கும் தேனிசைத் தென்றல் 

சிங்கப்பூர் என்றாலே நட்பும் அன்பும்தான்: இசையமைப்பாளர் தேவா

2 mins read
3d96776b-8fd4-4194-a828-068bcbdfd15c
சிங்கப்பூரில் ஜனவரி 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘தி ஸ்டார்‘ அரங்கில் ‘தேவா இன்னிசைச் சாரல்’ இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) பிற்பகல் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் திரு தேவா (நடுவில்), திரு ஸ்ரீகாந்த் தேவா (இடம்) இருவரும் பங்கேற்றனர். அருகில்  ‘8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் தலைவர் பெ. அருமைச் சந்திரன். - படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் முதல் இந்நாள் ரசிகர்கள் வரை பலரின் மனங்களைக் கவர்ந்த  புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா, சிங்கப்பூர் என்றாலே நட்பும் அன்பும்தான் அடையாளம் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஜனவரி 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘தி ஸ்டார்‘ அரங்கில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) பிற்பகல் இந்திய மரபுடைமை நிலையத்தில்  நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் திரு தேவாவும் திரு ஸ்ரீகாந்த் தேவாவும் பங்கேற்றனர்.

சிங்கப்பூரில் தமது குழுவினருடன் முதன்முறையாக நேரடி இசைநிகழ்ச்சி படைக்கவுள்ள இசையமைப்பாளர் தேவா, “சிங்கப்பூர் மக்கள் என்றாலே நட்புதான் நினைவுக்கு வருகிறது. இங்குள்ள ரசிகர்களின் நேசம் அற்புதமானது. எனவே அவர்களுக்காக நானும் என் குழுவினரும் நேரடி நிகழ்ச்சி படைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

“சிங்கப்பூர் மக்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மெல்லிசைப் பாடல்கள் முதல்  இளம் ரசிகர்களையும்  வசீகரிக்கும் கானா பாடல்கள் வரை பல்வேறு பாடல்கள் படைக்கப்படும்,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் ‘8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. 

முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் திரு தேவாவுடன் பங்கேற்ற திரு ஸ்ரீகாந்த் தேவா, “நிகழ்ச்சிக்கு வருவோரை எழுந்து நின்று நடனமாட வைக்கும் சிறப்பான இசைவிருந்தை வழங்குவதற்காகக் குழுவினருடன் இணைந்து பல நாள்களாகப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறோம். 

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அஜித், விஜய் என உச்ச நட்சத்திரங்களை முன்னிறுத்தும் வகையிலான திரை இசைக் கொண்டாட்டத்தைப் படைக்கவுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

விழாவில் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனுக்கு மிகவும் பிடித்தமான பாடலான  ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலை சிங்கப்பூர் மக்களுக்காகப் பாடவுள்ளதாகக் குறிப்பிட்டார் திரு தேவா.

“முன்னாள் அதிபருக்கு நான் இசையமைத்த அந்தப் பாடல் பிடித்திருந்ததாகக் கேள்விப்பட்டபோது மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். அதைவிடச் சிறந்த விருது வேறு ஒன்றுமில்லை.

“இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் அந்தப் பாடலை அவருக்காக ஒரு சில முறையாவது பாடியிருப்பேன். இருப்பினும், அவரது நினைவைப் போற்றும் விதமாக, ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் இசை நிகழ்ச்சியில் அந்தப் பாடலைப் பாடுவேன்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் தேவா.

இந்த இசை நிகழ்ச்சியில் தேவாவுடன் பிரபல இசைக் கலைஞர்கள் ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ் முரளி, மனோ, அனுராதா ஶ்ரீராம், விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ பாடகர்கள் உட்படப் புகழ்பெற்ற பலர் பங்கேற்க உள்ளதாகக் கூறினார் ‘8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்’ தலைவர் பெ. அருமைச் சந்திரன்.

‘தேவா இன்னிசைச் சாரல்’ இசைநிகழ்ச்சியின் நுழைவுச் சீட்டுகள் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. நுழைவுச்சீட்டுகளை ‘bookmyshow’ என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் ஜனவரி 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘தி ஸ்டார்‘ அரங்கில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 
சிங்கப்பூரில் ஜனவரி 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘தி ஸ்டார்‘ அரங்கில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  - படம்: 8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்
குறிப்புச் சொற்கள்