குடியரசுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றின் ஒரு பகுதியாக, சிங்கப்பூருக்கும் மணிலாவுக்கும் இடையே வாரந்தோறும் 150 கூட்டுப் பகிர்வு விமானச் சேவைகள்வரை இயங்கும்.
இதற்கு முன்னர் அந்த எண்ணிக்கை 35ஆக இருந்தது.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சின் துணைச் செயலாளர் யீ பிங் யியும், விமானப் பயண, விமான நிலையங்களுக்கான பிலிப்பீன்சின் துணைச் செயலாளர் என்ரிக்கே அண்டோனியோ ஜெ. எஸ்கிவெலும் அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர்.
அது இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துலக ஆகாயச் சேவைகளை மேம்படுத்தி, மேலும் தாராளமயமாக்கும்.
புரிந்துணர்வுக் குறிப்பு, முதன் முதலாக 2010ஆம் ஆண்டில் கையெழுத்தான இருதரப்பு ஆகாயச் சேவைகளின் உடன்படிக்கையை மேம்படுத்தும். அந்த உடன்படிக்கை கடைசியாக 2015ஆம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) கூறியது.
கூட்டுப் பகிர்வு ஒப்பந்தங்கள் மூலம், விமான நிறுவனங்கள் ஒன்று மற்றொன்றின் விமான இருக்கைகளை விற்று வருவாயைப் பகிர்ந்துகொள்வதோடு, பயணிகளுக்குக் கூடுதல் பயணத் தெரிவுகளும் வழங்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சிஏஏஎஸ் கூறியது.

