திருடப்பட்ட படகை மீட்ட மலேசியர்களுக்கு விருது வழங்கியது சிங்கப்பூர்க் காவல்துறை

திருடப்பட்ட படகை மீட்ட மலேசியர்களுக்கு விருது வழங்கியது சிங்கப்பூர்க் காவல்துறை

1 mins read
b94354fc-35f0-4035-97ec-f8897304ea87
சிங்கப்பூரின் கடலோரக் காவற்படைத் தளபதியுடன் விருதை வென்ற முகம்மது அஸ்ரி மனாப் (இடம்), கைரில் ஃபைசல் ஒத்மான்.  - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

மலேசியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கடற்பகுதியில் திருடப்பட்ட படகை மீட்டுக்கொடுத்த அந்நாட்டைச் சேர்ந்த ஆடவர்கள் இருவரைச் சிங்கப்பூர்க் காவல்துறை பாராட்டியிருக்கிறது.

முகம்மது அஸ்ரி மனாப், கைரில் ஃபைசல் ஒத்மான் எனும் அந்த இருவருக்கும் ‘சேஃபர்எஸ்ஜி பொதுநல உணர்வு விருது’ செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வழங்கப்பட்டது. புலாவ் உபினுக்கு வடக்கே அமைந்துள்ள கடற்பகுதியில், அவர்கள் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

இம்மாதம் 2ஆம் தேதி, சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சொகுசுப் படகொன்று மலேசியக் கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருப்பதை மீனவரான அஸ்ரி கண்டார். சிங்கப்பூர்ப் படகு அங்கிருப்பது அவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் நிழற்படத்தைத் தமது உறவினர் கைரிலுடன் பகிர்ந்துகொண்டார் அஸ்ரி.

கைரில், கடலோரக் காவற்படையினரின் சுற்றுக்காவல் படகை அணுகி, அதிகாரிகளிடம் தமது உறவினர் கண்ட சம்பவம் பற்றிக் கூறினார்.

“உரிய நேரத்தில் கொடுக்கப்பட்ட தகவல், படகைக் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவியாக இருந்தது. அந்தப் படகு களவுபோனதாக அன்று காலையில் புகார் கூறப்பட்டிருந்தது,” என்று காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்தது.

மலேசிய அரசுக் காவல்துறையின் கடலோரக் காவற்படையின் உதவியோடு படகு மீட்கப்பட்டு உரிமையாளரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.

விருது நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் கடலோரக் காவற்படைத் தளபதி அங் எங் செங், மலேசிய ஆடவர்கள் இருவரையும் பாராட்டினார்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியர்விருதுசிங்கப்பூர்காவல்துறைபடகுதிருட்டு