அணுசக்தி மதிப்பீட்டுக்குத் தயாராகிறது சிங்கப்பூர்; நிபுணத்துவக்குழு அமைப்பு

அணுசக்தி மதிப்பீட்டுக்குத் தயாராகிறது சிங்கப்பூர்; நிபுணத்துவக்குழு அமைப்பு

படம்: எஸ்பிஎச் மீடியா

27 Oct 2026 - 10:23 pm

2 mins read

அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்த முடிவை எடுக்கச் சிங்கப்பூர் தயாராக உள்ளதா என்பதை அனைத்துலக அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ 2027இல் மதிப்பீடு செய்யவுள்ளது.

அதற்குத் தயாராக சட்ட, அணுசக்தி துறை சார்ந்த 12 நிறுவனங்கள் கொண்ட நிபுணத்துவக் குழுவை எரிசக்தி சந்தை ஆணையம் அமைத்துள்ளதாக எரிசக்தி, வர்த்தக, தொழில் அமைச்சர் (எரிசக்தி, தொழில்) டான் சீ லெங் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) அறிவித்தார்.

ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 2027ல் சிங்கப்பூருக்கு அதிகாரிகளை அனுப்பவுள்ளது. அணுசக்திப் பாதுகாப்பு, கதிரியக்கக் கழிவு மேலாண்மை, அவசரகாலத் திட்டமிடல் போன்ற 19 முக்கியப் பிரிவுகளில் நாட்டின் திறன்களை அவர்கள் மதிப்பீடு செய்வார்கள்.

மே மாதம் நடந்த எரிசக்தி சந்தை ஆணையத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் அணுசக்தித் திட்டத்தை முதன்முதலில் அறிவித்திருந்தார். முதல் கட்ட மதிப்பீட்டில் சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு, திறன்கள் ஆய்வு செய்யப்படும்.

அணுசக்தித் திட்டம் சிக்கலானது என்பதால் சட்டம், நிதி, ஊழியர் திறன் மேம்பாட்டில் அனைத்துலகப் பங்காளித்துவம் முக்கியம் என்று டாக்டர் டான் கூறினார்.

எரிசக்தி சந்தை நியமித்துள்ள வல்லுநர் குழு தொழில்நுட்பம், நிதி மாதிரி, சட்ட வரைமுறைகள், திறனாய்வு ஆகிய பிரிவுகளில் வழிகாட்டும். தொழில்நுட்ப ஆலோசகர்களைக்கொண்ட 2வது வல்லுநர் குழு 2026 இறுதிக்குள் நியமிக்கப்படும்.

இதற்கிடையே, தேசிய சுற்றுப்புற அமைப்பு அணுசக்திப் பாதுகாப்பு குறித்த மூன்று ஆய்வுகளுக்காக அட்கின்ஸ்ரியலிஸ் சிங்கப்பூர், என்கோனெட் கன்சல்டிங், என்விரான்மென்டல் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களை நியமித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இக்குழுக்கள் அனைத்துலகப் பாதுகாப்பு தரநிலைகள், கதிரியக்கக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யும்.

குறிப்புச் சொற்கள்