சிங்கப்பூரில் கல்வி பயல ஏதுவாக கூடுதலான பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என்று வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
இப்போது மூன்று பாலஸ்தீன மாணவர்களுக்குச் சிங்கப்பூர் உபகாரச் சம்பளம் வழங்கி வருகிறது. அந்த எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்படும் என்று டாக்டர் மாலிக்கி கூறியுள்ளார். அவர்களில் அதாவது, தலா ஐந்து இளநிலை, முதுநிலைப் பட்டக் கல்வி மாணவர்கள் உபகாரச் சம்பளத்துடன் சிங்கப்பூரில் பயில்வர்.
காஸாவில் நிலவும் மனிதநேய நெருக்கடிச் சூழலுக்குத் தீர்வுகாணும் நோக்கில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் திங்கட்கிழமை (டிசம்பர் 2) நடந்த கருத்தரங்கில் சிங்கப்பூர் சார்பில் டாக்டர் மாலிக்கி கலந்துகொண்டார்.
கெய்ரோவில் பாலஸ்தீனப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகம்மது முஸ்தஃபாவுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, கூடுதல் பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவது குறித்து அவர் தெரிவித்தார்.
காஸாவில் நிலவும் கடுமையான சூழல்களுக்குத் தீர்வுகாணவும் டாக்டர் மாலிக்கி வலியுறுத்தினார்.
பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கைக்கான சிங்கப்பூரின் ஆதரவையும் அவர் மறுவுறுதிப்படுத்தினார்.
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலியச் சமூகத்தினர்மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 250க்கும் மேற்பட்டோர் பிணைபிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தரவுகள் கூறுகின்றன.
அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் இதுவரை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் 44,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர் கொல்லப்பட்டுவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ஐந்து முறை மனிதநேய உதவியைச் சிங்கப்பூர் வழங்கியுள்ளது. பணமாகவும் பொருள்களாகவும் $13 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்பிலான உதவியைச் சிங்கப்பூர் வழங்கியுள்ளது.
காஸாவிற்கு தடையற்ற வகையில் உதவிப்பொருள்கள் விநியோகம், இஸ்ரேலியப் படைகளால் உடனடிப் போர் நிறுத்தம், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகள் விடுதலை ஆகியவற்றையும் தமது உரையின்போது டாக்டர் மாலிக்கி வலியுறுத்தினார்.
தமது அதிகாரத்துவப் பயணத்தின்போது மலேசியா, ஜோர்தான், லெபனான், பஹ்ரேன் ஆகிய நாடுகளின் வெளியுறவுப் பேராளர்களையும் டாக்டர் மாலிக்கி சந்தித்துப் பேசினார்.
கெய்ரோவில் சிங்கப்பூர் மாணவர்களையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையுடன் (டிசம்பர் 3) டாக்டர் மாலிக்கியின் அதிகாரத்துவ கெய்ரோ பயணம் நிறைவுபெறுகிறது.