சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லா முதல் பேருந்து சோதனைக்கு தயார்

மரினா பே, ஒன்-நார்த் பகுதிகளில் முன்னோட்ட சோதனை

சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லா முதல் பேருந்து சோதனைக்கு தயார்

2 mins read
ba0ce55e-7f24-4af4-9c92-2f58c539feae
ஆறு தானியங்கிப் பேருந்துகள் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து மரினா பே, ஒன்-நார்த் பகுதிகளில் சோதனை முறையில் இயக்கப்பட உள்ளன.  - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் பேருந்து சிங்கப்பூர் வந்தடைந்துள்ளது.

இதனுடன் மேலும் ஐந்து தானியங்கிப் பேருந்துகள் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து மரினா பே, ஒன்-நார்த் பகுதிகளில் சோதனை முறையில் இயக்கப்பட உள்ளன.

மரினா பே பகுதியில் இயங்கும் பேருந்து சேவை 400, ஒன்-நார்த் பகுதியில் இயங்கும் பேருந்து சேவை 191 ஆகியவற்றில் இந்தப் பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (மார்ச் 25) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.

சாலைப் பயன்பாட்டிற்கு முன்னதாக, அனைத்துப் பாதுகாப்பு, செயல்பாட்டுத் தரநிலைகளையும் உறுதிப்படுத்த அவை தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

பேருந்துகள் முழுமையாகத் தயாரானதும், தற்போதுள்ள ஓட்டுநர்களால் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளுடன் அவைகள் சாலைகளில் இயங்கும்.

மார்ச் மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்திறங்கிய இந்த அதிநவீனப் பேருந்தின் அம்சங்களைக் காட்டும் காணொளியை ஆணையம் வெளியிட்டது.

16 இருக்கைகள் கொண்ட நவீனப் பேருந்து

சக்கர நாற்காலிப் பயன்பாட்டாளர்களுக்கான தனி இடவசதி உள்ளிட்ட பொதுப் பேருந்துகளில் இருப்பதைப் போன்ற அம்சங்களுடன் 16 இருக்கைகளை இப்பேருந்து கொண்டுள்ளது.

பேருந்தின் முன், பின், மேல் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மேம்பட்ட கேமராக்கள், உணர்கருவிகள் மூலம் பேருந்தின் சுற்றுப்புறத்தை 360 - டிகிரி கோணத்தில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

தானியங்கி பேருந்து சோதனை: மரினா பே & ஒன்-நார்த்

பேருந்து சேவை எண் 400, மரினே பே - ஷென்டன் வே வழித்தடத்தில் சேவை வழங்கும். மரினாபே குரூஸ் சென்டர், கரையோரப் பூந்தோட்டங்கள் மற்றும் ஷென்டன் வே, டவுன்டௌன் ஆகிய எம்ஆர்டி நிலைய நிறுத்தங்களில் இப்பேருந்து நிற்கும்.

ஒன்-நார்த் பகுதியில் சேவையாற்றும் பேருந்து சேவை எண் 19, புவனவிஸ்தா பேருந்து முனையத்துக்கும் ஒன்-நார்த், புவனவிஸ்தா எம்ஆர்டி நிலையங்களுக்குச் சேவை வழங்கும்.

முதல் ஆறு பேருந்துகளின் மூன்றாண்டு கால முன்னோட்டச் சோதனையைத் தொடர்ந்து, மேலும் 14 பேருந்துகளை சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆறு பேருந்துகளும் அவற்றின் அமைப்புகளும், மென்பொருள், செயலி உருவாக்குநரான எம்கேஎக்ஸ் டெக்னாலஜிஸ், தானியங்கி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஷிடாவோ நெட்வொர்க் டெக்னாலஜி (பெய்ஜிங்), மின்சார வாகனத் தயாரிப்பாளரான பிஒய்டி ஆகிய முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்