சிங்கப்பூரில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் 2023ல் சரிவு

2 mins read
மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை
340e1673-3b9a-4707-95c2-bb3f939a2f77
சிங்கப்பூரில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் 55.5 மில்லியன் டன் கரியமில வாயுக்கு ஈடான அளவுக்குக் குறைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக வெப்பமயமாதலுக்குக் காரணமான, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் சிங்கப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு 55.5 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 5.3 விழுக்காடு குறைவு. 2022ல் அத்தகைய வாயுக்களின் வெளியேற்ற அளவு 58.59 மில்லியன் டன் கரியமில வாயுக்குச் சமம்.

தேசியப் பருவநிலை மாற்றச் செயலகத்தின் இணையத்தளத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் செயலகம் பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும்.

சிங்கப்பூரில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்பில் வெளியான ஆக அண்மைய தகவலறிக்கை இது.

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாயுக்களின் வெளியேற்ற அளவு சரிந்தது இது முதன்முறை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சரிவைத் தக்கவைத்துக் கொள்வது முக்கியம் என்று அவர்கள் கூறினர்.

தொழில்துறை மூலம் நேரடியாக வெளியேற்றப்படும் இத்தகைய வாயுக்களின் அளவு குறைந்ததே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

2023ல் இத்தகைய வாயுக்களின் வெளியேற்றத்தில் தொழில்துறையின் பங்கு கிட்டத்தட்ட 50 விழுக்காடாகும். அதையடுத்து மின்சாரத் துறை 38.7 விழுக்காடும் போக்குவரத்துத் துறை 11.7 விழுக்காடும் பங்கு வகிக்கின்றன.

போக்குவரத்துத் துறையில் பெட்ரோல், டீசல் பயன்பாடு தொடர்ந்து வீழ்ச்சி கண்டதும் இந்த வாயுக்களின் வெளியேற்றம் சரிந்ததற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூர் வாகனங்களில் 2040ஆம் ஆண்டுக்குள் தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கிய பாதையில் முன்னேற்றம் காணப்படுவதை இது சுட்டுவதாக தேசியப் பருவநிலை மாற்றச் செயலகம் கூறியது.

இருப்பினும், 2030ஆம் ஆண்டுக்குள், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அது குறிப்பிட்டது. பொருளியல் நிலவரங்களும் சிங்கப்பூரில் படிப்படியாகத் தணிப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதும் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.

முன்னதாக, இத்தகைய வாயுக்களின் வெளியேற்றம் 2028ல் உச்சமடையக்கூடும் என்றும் பின்னர் 2030ல் ஏறக்குறைய 60 மில்லியன் டன்னாகப் பதிவாகலாம் என்றும் சிங்கப்பூர் குறிப்பிட்டிருந்தது. 2035க்குள் 45 முதல் 50 மில்லியன் டன்னாகக் குறைக்கவும் அது கடப்பாடு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2030, 2035ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகளை எட்டுவதில் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாகச் செயலகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்