குடும்ப வன்முறை: பாதிக்கப்படுவோரைக் காக்க மாதர் சாசனத்தில் முக்கியத் திருத்தங்கள்

2 mins read
86f04bc9-e762-408b-9c17-80891b5ca32c
குடும்ப வன்முறை அவசரகாலச் செயற்குழுவின் நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வரும் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திருத்தங்கள் குறித்த அறிவிப்புகளை உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வெளியிட்டார். - படம்: சாவ் பாவ்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதை உறுதிசெய்ய மாதர் சாசனத்தில் புதிய திருத்தங்கள் ஜனவரி 2025ல் நடைமுறைக்கு வரவுள்ளதாக உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.

குடும்ப வன்முறை அவசரகாலச் செயற்குழுவின் (DVERT) பங்காளிகளைப் பாராட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (நவம்பர் 18) நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய திருவாட்டி சுன், குடும்ப வன்முறை அவசரகாலச் செயற்குழுவின் நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வரும் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திருத்தங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாதர் சாசனத்தில் வரவுள்ள திருத்தங்கள் 

ஜனவரி 2025ல் அமலுக்கு வரவுள்ள மாதர் சாசனத் திருத்தம், ‘அவசரகால ஆணை’ எனும் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி, குடும்ப வன்முறை அவசரகாலச் செயற்குழு அதிகாரிகள், அவசரகால ஆணையைப் பிறப்பிக்கவோ சம்பவ இடத்தில் அத்தகைய ஆணைகளை அதிகாரமுள்ள நபர்கள் பிறப்பிக்க கட்டளையிடவோ முடியும்.  

மேற்கூறிய அவசரகால ஆணை, “வீட்டிலிருந்து விலகி இருக்கும் ஆணை, தொடர்பில்லாமல் இருக்கும் ஆணை, விலகி இருக்கும் ஆணை அல்லது இந்த மூன்றையும் ஒருசேர வழங்கும் ஆணையாகவும் இருக்கலாம்,” என்று விவரித்தார் திருவாட்டி சுன்.

இத்தகைய ஆணைகள் மற்றும் அவற்றுடன் வரும் உத்தரவுகள், குடும்ப வன்முறையிலிருந்து மீண்டவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பை வழங்குவதாக திருவாட்டி சுன் தெரிவித்தார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிசெய்ய அமைச்சு அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.

அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களின்படி ‘குடும்ப வன்முறை’ என்பதன் சொல் வரையறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதுபற்றி குறிப்பிட்ட திருவாட்டி சுன், “உடல், பாலியல், உணர்வு மற்றும் உளவியல் சார்ந்த வரம்பு மீறல்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட பரந்த வரையறை குடும்ப வன்முறையிலிருந்து தப்பியவர்களுக்கான விரிவான பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது,” என்று தெரிவித்தார்.

அவசரகால உத்தரவுகள், விரிவான வரையறைகளுடன் குடும்ப வன்முறையிலிருந்து மீண்டவர்களைப் பாதுகாக்க மின்னணுக் கண்காணிப்பும் கைகோக்கவுள்ளது.

இதன்படி, விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், குடும்ப வன்முறையிலிருந்து மீண்டு வாழ்பவர், தனிநபர் பாதுகாப்பு ஆணை மீறப்பட்ட போதிலும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மின்னணுக் கண்காணிப்பு எனும் இந்த நடவடிக்கை அதிக ஆபத்து நிறைந்த சூழல்களில், குடும்ப வன்முறையிலிருந்து மீண்டவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தருகிறது என்று துணை அமைச்சர் தெரிவித்தார். 

“குடும்பம் என்பது அதன் அங்கத்தினர் பாதுகாப்பாகவும் அது தங்களுக்கு ஆதரவளிக்கும் இடம் என்பதை உணரும் வகையிலும் திகழ வேண்டும். குடும்ப வன்முறையை மன்னிக்க முடியாது,” என்ற திருவாட்டி சுன், மேற்கூறிய திருத்தங்கள் குடும்ப வன்முறையை எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூரின் கடப்பாட்டைக் காட்டுகின்றன என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மாதர் சாசனம்குடும்ப வன்முறைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுசிங்கப்பூர்