சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம்பதிக்கும் உள்ளூர் கவிதைகள்

பெருமிதங்கொள்ளச் செய்யும் உள்ளூர்க் கவிதைகளின் பயணம்

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம்பதிக்கும் உள்ளூர் கவிதைகள்

3 mins read
4dd42903-ae16-4687-9c8c-ce8dba463711
நிகழ்ச்சி மேடையில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்திற்கு $2,000 நன்கொடை காசோலையாக வழங்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் ஆழமான வேர்களையும் அதன் கவிதை வரலாற்றுப் பரிணாமத்தையும் ஆவணப்படுத்தும் ‘சிங்கைத் தமிழ் இலக்கியச்சுடர்’ எனும் ஆய்வு நூல் சனிக்கிழமை ( பிப்ரவரி 22)  தேசிய நூலகக் கட்டடத்தில் வெளியிடப்பட்டது. 

1872 முதல் 21ஆம் நூற்றாண்டுவரை சிங்கப்பூரில் இயற்றப்பட்டு வெளியான கவிதைகள் குறித்துக் காலவரிசையிலும் பல்வேறு தலைப்புகளுக்கு உட்பட்டும் ஆய்வுசெய்யும் 15 கட்டுரைகளின் தொகுப்பாக இணைப் பேராசிரியர் டாக்டர் ஆ.ரா. சிவகுமாரன் இந்நூலை எழுதியுள்ளார்.

தமிழ் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் இந்நூல் சனிக்கிழமை (பிப்ரவரி 21) வெளியீடு கண்டது. 

தரவுகள் நிரம்பிய தொகுப்பு

குறுகிய காலத்தில் இந்நூல் அவசரமாக எழுதப்பட்டதன்று என்றும் மாறாக, ஆசிரியர் பல்வேறு ஆய்வரங்குகளில் வாசித்த கட்டுரைகள், இதழ்களுக்காக எழுதிய ஆய்வுகளின் செழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு என்றும் டாக்டர் சிவகுமாரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“நான் இந்நூலுக்காக மட்டும் இந்தக் கட்டுரைகளை எழுதவில்லை. ஏற்கெனவே மாநாடுகளிலும் இதழ்களிலும் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, இக்காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்து வெளியிட்டிருக்கிறேன்,” என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சமூகத்தினருடன் இணைப் பேராசிரியர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. சிவகுமாரன்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சமூகத்தினருடன் இணைப் பேராசிரியர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. சிவகுமாரன் - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் தொடக்கக் காலச் சான்றுகளைத் திரட்டுவது கடினமான பணியாக இருந்ததாகவும் இதற்குத் தேசிய நூலகத்தின் ஆவணங்கள் தமக்குப் பெருந்துணையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.  

தரவுகளை உறுதிப்படுத்துவதற்காக அவர் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு நேரில் சென்று களப்பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக, குறிப்பிட்ட ஒரு கவிஞரின் வரலாற்றைத் தேடி அவர் பிறந்த ஊருக்கே சென்றபோது, அங்குள்ள மக்களுக்கே அவரைப் பற்றித் தெரியாத நிலை இருந்தது. 

சிங்கைத் தமிழ் இலக்கியச்சுடர்: விரிவான ஆய்வு

பழைய நாடக மேடைப் பாடல்களின் மெட்டுகளைத் திரட்ட முயன்றபோது, “ஓராண்டுக்கு முன்னால் வந்திருந்தால் என் தந்தையிடம் (நாடகக் கலைஞர்) கேட்டிருக்கலாம். அவர் மறைந்துவிட்டதால் இப்போது தகவல் கிடைப்பது அரிது,” என்று வாரிசுகள் கூறியது போன்ற அனுபவங்கள் ஆவணப்படுத்துதலின் அவசியத்தை உணர்த்துகின்றன.

19ஆம் நூற்றாண்டு முதல் உருவான இந்தக் கவிதைகளில் தொடக்கத்தில் இறையுணர்வு மேலோங்கியது என்றும் காலப்போக்கில் காதல், சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஒட்டிய படைப்புகள் படிப்படியாக அதிகரித்தன என்றும் டாக்டர் சிவகுமாரன் குறிப்பிட்டார்.

கவிஞர்களின் தனித்திறமைகள் குறித்துப் பேசியபோது, “முருகதாசன் போன்ற ஆளுமைகளை அவர் உதாரணமாகக் காட்டுகிறார். முருகதாசன் ஒரு மின்பணியாளராக இருந்தபோதிலும் அவருக்குள் இருந்த கவித்திறன் அபாரமானது,” என்றார் டாக்டர் சிவகுமாரன். 

அறிஞர்கள் புகழாரம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு வரவேற்புரை ஆற்றிய அதன் தலைவர் முத்துமாணிக்கம், இந்நூலை மதிப்பிற்குரிய சமூகப் பங்களிப்பாக இருப்பதாகப் பாராட்டினார்.

அதன்பின் தலைமை உரை ஆற்றிய மூத்த தமிழறிஞர் டாக்டர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் இலக்கியத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு டாக்டர் சிவகுமாரன் முக்கியமானவர் எனப் புகழாரம் சூட்டினார். 

“சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் எந்த வகையிலெல்லாம் வாழ்ந்திருக்கிறது என்பதைச் சொல்வதற்கு ஓர் அருமையான நூல்,” என்றார் அவர். 

விழாவில் பங்கேற்ற பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன் பேசுகையில், “சிங்கைத் தமிழ் இலக்கியச் சுடர் என்கின்ற இந்த நூல் சுவையான உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது,” என வருணித்தார். அவரைப் போலவே இணைப் பேராசிரியர் டாக்டர் சீதாலட்சுமி, படைப்பாளர் மில்லத் அகமது, டாக்டர் அ. வீரமணி ஆகியோரும் நூலின் சிறப்பம்சங்களைத் தத்தம் உரைகளில் எடுத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்