அமெரிக்கா, சீனா இரண்டுக்கும் நம்பகமான நண்பராக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.
“அமெரிக்காவுடனும் சீனாவுடனும் தற்போது நல்ல நட்புறவைக் கொண்டுள்ளோம். இந்த நல்லுறவை எதிர்காலத்திலும் தொடர வேண்டும்,” என்றார் பிரதமர்.
இக்கட்டான உலகச் சூழலில் நிறைய நெருங்கிய நண்பர்களை வைத்திருப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
புதன்கிழமை (ஏப்ரல் 16) 14வது எஸ். ராஜரத்தினம் விரிவுரையை ஆற்றியபோது திரு வோங் இவ்வாறு பேசினார்.
இந்த வட்டாரத்திலிருந்து அமெரிக்கா விலகிச் சென்றால் அது அபாயகரமானது என்று எச்சரித்த அவர், பாதுகாப்பு, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல் போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் சிங்கப்பூரின் கூட்டமைப்பை எடுத்துரைத்தார்.
“அமெரிக்கா இவ்வட்டாரத்தில் தனது நலன்கள் என்னவென்று புரிந்துகொள்ளவும் அதனுடைய இருப்பை இங்கு நிலைநாட்டவும் நாம் உதவ வேண்டும்,” என்றார் திரு வோங்.
சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அணுக்க உறவு குறித்து குறிப்பிட்ட அவர், அரசாங்கத் தொடர்புகளுக்கு அப்பாற்பட்டு முக்கியத் தனியார், பொருளியல் திட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.
“அமெரிக்கா-சீனா இடையே நிலவும் இந்தச் சிக்கலான வணிகப் போரைச் சமாளிப்பது எளிதாக இருக்காது. இந்த மோதலுக்கிடையே சிக்கிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம். நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்,” என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் சிங்கப்பூர் மட்டுமல்லாது பல நாடுகளும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார்.
இந்த நிலைமையைச் சமாளிக்க விறுவிறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதும் திறமையான வெளியுறவுக் கொள்கைகளும் தேவை என்றார் அவர்.
அரசாங்கம் மட்டுமின்றி, ஊடகங்கள், வர்த்தகங்கள், கல்வித்துறை உள்ளிட்ட பரந்த சமூகத்தின் ஆதரவும் தேவைப்படுவதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
“அனைத்து நடவடிக்கைகளிலும் சிங்கப்பூரின் நலனுக்கு நாம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த அணுகுமுறை சிங்கப்பூரை ஒரு நம்பகமான, கொள்கை ரீதியான கூட்டாளியாக நிலைநிறுத்த உதவும்,” என்ற அவர், அது இரு பெரிய வல்லரசுகளுடனான தொடர்புகளைச் சமநிலைப்படுத்தவும் உதவும் என்றும் சொன்னார்.

