தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து மலேசியா, ஆசியானுடன் சிங்கப்பூர் அணுக்கமாகச் செயல்படும்: பிரதமர் வோங்

2 mins read
acc0eb49-641e-40da-b912-66a8c16d16ba
பிரதமர் லாரன்ஸ் வோங் (இடது), தொலைபேசிவழி மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்து தெரிவித்தார். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூர், வட்டார அளவிலான பொருளியல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் உலக வர்த்தகப் பங்காளிகளுடன் ஆக்ககரமான முறையில் தொடர்புகொள்ளவும் மலேசியாவுடனும் ஆசியான் நாடுகளுடனும் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் எல்லா நாட்டுப் பொருள்களுக்கும் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒட்டுமொத்தமாகப் புதிய வரி விதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரதமர் வோங் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) ஃபேஸ்புக்கில் இவ்வாறு கூறினார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குத் தொலைபேசிவழி தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட பிறகு திரு வோங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் தொடரும் அதேவேளையில் வட்டார அளவில் மட்டுமின்றி அதையும் தாண்டிய இடங்களில் காணப்பட்ட நிகழ்வுகளால் இந்த வாரம் வருத்தம் தரும் வாரமாக அமைந்ததை அவர் குறிப்பிட்டார்.

“இதுபோன்ற நிலையற்ற காலங்களில் சிங்கப்பூர், மலேசியா, நமது அண்டை நாடுகளான ஆசியான் உறுப்பு நாடுகள் ஆகியவை நமக்கிடையிலான ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திக்கொள்வது இன்றைய சூழலில் மிக முக்கியமாகிறது,” என திரு வோங் பதிவிட்டார்.

“சென்ற வாரம் மோசமான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து பிரதமர் அன்வாரும் நானும், மியன்மாரில் தொடரும் மனிதாபிமான நிலவரம் குறித்துப் பேசினோம்.

“அண்மையில் அமெரிக்கா விதித்த வரிகளைப் பற்றியும் கருத்து பரிமாறிக்கொண்டோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் மே மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் திரு அன்வாருடன் மேலும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாகப் பிரதமர் வோங் சொன்னார்.

மலேசியா, இவ்வாண்டு ஆசியான் கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்கிறது. அப்பொறுப்பு, மாறி மாறி உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆசியான் மாநாட்டை மே 26, 27ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்