தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயற்கையைக்‌ கொண்டாடும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா

3 mins read
24248ed9-01e1-40c2-b5e3-d8e399228bb1
முதன்முறையாக சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் இயக்குனராக இவ்வாண்டு செயல்படும் யோங் ஷு ஹூங் குட்மேன் ஆர்ட்ஸ் செண்டரில் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 3) நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றினார். - படம்: மூன்ரைஸ் ஸ்டுடியோ 
multi-img1 of 4

சிங்கப்பூரின் முக்கியப் பன்மொழி இலக்கிய விழாவான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, இவ்வாண்டு நவம்பர் 8 முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளுடன் ஏனைய உலக மொழிகளின் இலக்கியங்களையும் கொண்டாடும் இவ்விழா, இவ்வாண்டு ‘நம் இயற்கையும் இயல்புகளும்’ என்ற கருப்பொருளையொட்டி எழுத்­தா­ளர்­கள், கல்­வி­யா­ளர்­கள், ஆர்வலர்கள் ஆகி­யோர் சந்­தித்து கருத்­து­கள் பரிமாற்றிக்கொள்ளும்விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாற்பது வெளிநாட்டு எழுத்தாளர்களை உள்ளடக்கிய 300க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் வழங்கும் 200க்கும் மேற்பட்ட சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சிகளில் வருகையாளர்கள் கலந்துகொள்ளலாம் என்று முதன்முறையாக சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் இயக்குனராக இவ்வாண்டு செயல்படும் யோங் ஷு ஹூங் குட்மேன் ஆர்ட்ஸ் சென்டரில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற தொடக்க விழாவில் தெரிவித்தார்.

தேசிய கலை­கள் மன்­றம் ஏற்­பாட்டில் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ நடத்­திவரும் இவ்விழா, கலந்­து­ரை­யா­டல்­கள், உரை­கள், பயி­ல­ரங்­கு­கள் முதலிய இலக்­கிய நிகழ்ச்­சிக­ளு­டன், இசை, நாடக நிகழ்ச்­சி­களையும் கொண்ட பல்­கலை விழாவாக அமையும்.

இவ்வாண்டின் விழாவில் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான இளங்கோ கிருஷ்ணன், விருது பெற்ற இயற்கை ஆர்வலரும் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரன், சிறப்புக்கல்வி ஆசிரியரும் எழுத்தாளருமான லஷ்மி பாலகிருஷ்ணன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு சிறப்­பிக்க உள்­ள­னர்.

கவி­மாலை, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கொக்கரக்கோ, சிங்கப்பூர் கவிதை விழா உள்­ளிட்ட அமைப்­பு­க­ளு­டன் இணைந்து பல்­வேறு தமிழ் நிகழ்ச்­சி­க­ள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இளங்கோ கிருஷ்ணன் நடத்தவுள்ள நவீன கவிதைப் பயிலரங்கில் தமிழில் சமகால கவிதைகளை எழுதுவதன் நுணுக்கங்களைப் பற்றியும் வாசகர்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கவிதைகளை எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றியும் அவர் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்.

இயற்கை, தமிழிலக்கியத்தைப் பற்றி இளையர்களுக்கான கருத்தரங்கை தியோடர் பாஸ்கரன் வழிநடத்தவுள்ளார். இதில் சுற்றுச்சூழல் பற்றிய கலந்துரையாடல்களைத் தமிழில் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஒட்டி பாஸ்கரன் உரையாற்றுவதோடு தமிழ் எழுத்துப் படைப்புகளில் இயற்கையின் இடத்தைப் பற்றி சிங்கப்பூர் இளையர்களும் விளக்‌கவுள்ளனர்.

சிறப்புத்தேவையுள்ள பிள்ளைகளை வளர்ப்பது குறித்த பார்வைகளைப் பற்றி லஷ்மி பாலகிருஷ்ணனுடன் உள்ளூர் நிபுணர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

‘கடலுக்குள்ள போறோம்’ என்ற தலைப்பில் சிறுவர் நாடகம், 2 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளுக்‌கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ், சீனம், மலாய் மரபு கவிதைகளைப் பற்றியும் அவற்றின் நுணுக்கங்களை ஆராயவும் பன்மொழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.

மேலும், பல நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

“பெறப்பட்ட பரிந்துரைகளிலிருந்து இயற்கைச் சூழலை அல்லது மனித இயல்பை ஆராயும் பொருத்தமான சிறப்புப் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நிகழ்ச்சிகளையும் இவ்வாண்டின் கருப்பொருளுக்கேற்ப வடிவமைத்துள்ளோம்,” என்று கூறினார் விழாவின் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான திருமதி சித்ரா ரமே‌ஷ், 62.

கடந்த 2023 முதல் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டுவரும் திருமதி சித்ரா ரமே‌ஷ், சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாட்டில் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் எழுத்தாளர் விழா பறைசாற்றுவதாக சொன்னார்.

“பல்வேறு மொழிகளையும் கலாசாரங்களையும் ஒன்றிணைக்கும் இந்த விழாவை சிங்கப்பூர் நடத்துவது மிகவும் பெருமைக்குரியது,” என்று கூறினார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக இளையர்களிடையே தமிழ் இலக்கியத்தின்மீதான ஆர்வம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிகாட்டினார்.

“இளையர்கள் இதுவரை அனுபவித்திராத வழிகளில் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இந்த விழா வழங்குகிறது. இது தமிழ் இலக்கியத்தின் எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய தொடக்கமாகும். மேலும், புதிய தலைமுறையினரைத் தமிழ் இலக்கிய உலகில் பங்களிக்க இவ்விழா ஊக்குவிக்கிறது,” என்றார் திருமதி சித்ரா ரமே‌ஷ்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா குறித்த மேல் விவரங்களுக்‌கு www.singaporewritersfestival.com என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்