சிங்கப்பூரர்கள் சிலர் இணைந்து, போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்கில் இரண்டு மாதங்களில் S$110,000 தொகைக்குமேல் நிதி திரட்டியுள்ளதாக மதர்ஷிப்.எஸ்ஜி தகவல் வெளியிட்டுள்ளது.
கல்வி உபகாரச் சம்பளத்துக்காக அவர்கள் அவ்வாறு நிதி திரட்டினர்.
பாலஸ்தீனர் உபகாரச் சம்பளத் திட்டம், 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் நான்கு ஆண்டுகளுக்கு முழுநேரக் கல்வி பயில, பாலஸ்தீன மாணவர்கள் இருவருக்கு உதவும் நோக்கில் S$400,000 திரட்டுவது அதன் நோக்கம். அந்த மாணவர்களின் கல்விக் கட்டணம், தங்குமிடக் கட்டணம், வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் திட்டமிடப்பட்டது.
சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து, சேர இடம் கிடைத்த பாலஸ்தீன மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதற்குப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 100க்கு அதிகமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் காஸாவைச் சேர்ந்தவர்கள்.
உபகாரச் சம்பளம் பெறும் முதல் தொகுதி மாணவர்கள் கல்வியாண்டு 2025ல் சிங்கப்பூரில் கல்வியைத் தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உபகாரச் சம்பள நிர்வாகக் குழுவிற்கு முன்னாள் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் ஆந்தியா ஓங் இருவரும் கூட்டாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பதிவுசெய்யப்பட்ட அறப்பணி அமைப்பான ‘ரே ஆஃப் ஹோப்’, இந்த உபகாரச் சம்பளத்துக்குத் திரட்டப்படும் நிதியின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யும் என்று கூறப்பட்டது.
‘பிஎஸ்ஐ’ திட்டம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு துறையைச் சேர்ந்தோரின் ஆதரவைப் பெற்றுள்ளது. இங்குள்ள பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பையும் அனைத்துலக வல்லுநர்கள், ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பின் தூதர் போன்றோரின் ஆலோசனைகளையும் அது பெற்றுள்ளது.
2025 ஜனவரி 18ஆம் தேதி வரை 650க்கும் மேற்பட்டோர் இதற்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
நன்கொடை அளிக்க விரும்புவோர் https://events.rayofhope.sg/events/palestinian-scholarship-initiative/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.