சிங்கப்பூரில் காற்றுத்தரம் சனிக்கிழமை (அக்டோபர் 24) காலை நிலவரப்படி ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது.
24மணி நேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) அன்றையதினம் காலை 7மணிக்கு வடக்கிலும் தெற்கிலும் 115, கிழக்கில் 117, மேற்கில் 142, மத்திய வட்டாரத்தில் 133 எனப் பதிவானது. 100ஐக் கடந்த குறியீடு, ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கும்.
ஒரு மணிநேரத்துக்கான பிஎம்2.5 குறியீடு தீவின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகமான நிலையில் உள்ளது. காலை 7 மணிக்கு வடக்கில் 79, தெற்கில் 78, கிழக்கில் 68, மேற்கில் 107, மத்திய பகுதியில் 94 என்று பதிவானது. 55ஐக் கடந்த குறியீடு காற்றில் அதிக நுண்துகள்கள் படிந்துள்ளதைக் காட்டும்.
வெள்ளிக்கிழமை காலை ஓரளவு மிதமான நிலையில் இருந்த காற்றுத்தரம் அன்றைய தினம் பிற்பகல் முதல் மாலைவரை ஒருசில பகுதிகளில் மோசமடையத் தொடங்கியது. இரவு முதல் சனிக்கிழமை அதிகாலைக்குள் தீவின் அனைத்து வட்டாரங்களும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டின.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் காற்றுத்தரம் நிலையற்ற தன்மையுடன் பாதிப்படைந்து வருகிறது.
ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் உள்ளதால் நாள்பட்ட மருத்துவப் பிரச்சினைகள் உள்ளோர் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது நல்லது.
