பருவநிலை மாற்றங்கள் கொண்டுவரும் தாக்கங்களை கருத்தில்கொண்டு நாடு தனது முன்னுரிமைகளை சீரமைத்திட வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி அண்மையில் கூறியிருந்தார்.
வெப்பம் அதிகரிப்பது, கடல்மட்டம் உயர்வது உள்ளிட்ட பருவநிலை சார்ந்த மாற்றங்களை சிங்கப்பூர் கடந்து செல்கையில், பருவநிலைத் தகவமைப்பு சார்ந்த இக்கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. பருவநிலைத் தகவமைப்பில் செயலாற்றிட இது சரியான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 2023 மே மாதத்தில் 37 டிகிரி செல்சியஸ் உச்சத்தைத் தொட்ட வெப்பநிலை, கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் திடீர் வெள்ளம், பெருமழை என அனைத்தும் சிங்கப்பூரிலும் பருவநிலை சார்ந்த அச்சுறுத்தல்கள் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றன.
கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான ஜனில், கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான இலக்கில், புவிசார் அரசியல் சூழல்கள் இடையூறுகளை விளைவித்துள்ளதால் பருவநிலை தகவமைப்பில் சிங்கப்பூர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

