சிங்கப்பூர்ப் பொருளியல் நாலாம் காலாண்டில் 5.7% வளர்ச்சி

2 mins read
52332517-7ffc-4f1e-8c9a-014fea46085a
பொருளியல் 2025இன் மூன்றாம் காலாண்டில் 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பொருளியல், கடந்த ஆண்டு (2025) முழுமைக்கும் 4.8 விழுக்காட்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அமெரிக்க வரிகளுக்கு இடையிலும் அது சாத்தியமாகியிருக்கிறது. நான்காம் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி எதிர்பார்ப்பை விஞ்சியதே அதற்குக் காரணம்.

பொருளியல் 2025இன் நாலாம் காலாண்டில் 5.7 விழுக்காடு விரிவடைந்தது. அதற்கு முந்திய காலாண்டில் அது 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. வர்த்தக, தொழில் அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகளில் அந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்று அமைச்சு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முன்னுரைத்திருந்தது. வளர்ச்சி, ஒரு விழுக்காட்டுக்கும் மூன்று விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

பொருளியல் 4.8 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முதன்முதலில் பிரதமர் லாரன்ஸ் வோங் டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்திருந்தார். வளர்ச்சி, 1.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று ஆகஸ்ட் மாதம் அமைச்சு மதிப்பிட்டிருந்ததை அது விஞ்சியது.

2024ஆம் ஆண்டின் 4.4 விழுக்காட்டைக் காட்டிலும் சென்ற ஆண்டின் வளர்ச்சி அதிகம். 2021க்குப் பிறகு பொருளியல் ஆக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. 2021ல் வளர்ச்சி, 9.8 விழுக்காடாக இருந்தது.

காலாண்டு அடிப்படையில் பொருளியல் நான்காம் காலாண்டில் 1.9 விழுக்காடு கூடியது. மூன்றாம் காலாண்டின் வளர்ச்சியான 2.4 விழுக்காட்டைவிட அது அதிகம்.

உயிர்மருத்துவ, மின்னணுப் பிரிவுகளின் வலுவான விரிவாக்கத்தால் உற்பத்தித் துறை 2025இன் நாலாம் காலாண்டில் 15 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது. முந்திய காலாண்டில் அது 4.9 விழுக்காடாக இருந்தது.

காலாண்டு அடிப்படையில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 9.2 விழுக்காடு உயர்ந்தது. மூன்றாம் காலாண்டில் அது 11.1 விழுக்காடு விரிவடைந்திருந்தது.

கட்டுமானத் துறை சென்ற காலாண்டில் 4.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. முந்திய காலாண்டின் 5.1 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது சற்றுக் குறைவு.

சேவைத் துறைகளுக்குள், மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகம், போக்குவரத்து, சேமிப்புப் பிரிவுகளின் வளர்ச்சி, கூட்டாக நாலாம் காலாண்டில் 3.9 விழுக்காடு. அதற்கு முந்திய காலாண்டில் பதிவான 3.7 விழுக்காட்டைவிட அது கொஞ்சம் அதிகம்.

தகவல், தொடர்பு, நிதி, காப்புறுது, நிபுணத்துவச் சேவைத் துறைகள் 4.2 விழுக்காட்டு வளர்ச்சியைக் கண்டன. முந்திய காலாண்டின் வளர்ச்சியான 4.5 விழுக்காட்டை அவை நீட்டித்தன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரிகளின் தாக்கம் உலகப் பொருளியலின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கும் என்று அமைச்சு சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே எதிர்பார்த்திருந்தது.

இருப்பினும் உலக அளவில் பொருளியல் சூழல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக மீள்திறனை வெளிப்படுத்தியது. பெரும்பாலான தீர்வைகளின் விகிதங்கள், ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்