தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் எதிர்பாரா மீட்சி

2 mins read
73b6b097-8691-4437-b425-a48b038db84c
செப்டம்பர் மாதத்தில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 2.1 விழுக்காடு வீழ்ச்சி காணும் என்ற பொருளியல் வல்லுநர்களின் கணிப்பைப் பொய்யாக்கி, ஏற்றுமதி 6.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் கடந்த செப்டம்பர் மாதம் எதிர்பாரா விதமாக மீண்டுள்ளன.

மின்சாரப் பொருள்களின் ஏற்றுமதி கூடியதைத் தொடர்ந்து முக்கிய ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. எனினும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் பூசல் தலைதூக்கியிருப்பதால் முன்னுரைப்பு பாதிக்கப்படலாம் என்று கவனிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் ஆண்டு அடிப்படையில் 6.9 விழுக்காடு கூடின. முந்தைய மாதத்தில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 11.5 விழுக்காடு குறைந்திருந்தன.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.

செப்டம்பரில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 2.1 விழுக்காடு குறையும் என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற பொருளியல் வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

மின்சாரப் பொருள்களின் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 30.4 விழுக்காடு அதிகரித்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சாரப் பொருள்கள் ஏற்றுமதி 6.5 விழுக்காடு குறைந்திருந்தது.

கணினிகள் போன்ற பொருள்களின் ஏற்றுமதிகள் அதிகரித்தது மீட்சிக்குக் காரணமாக அமைந்தது.

செப்டம்பரில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 0.4 விழுக்காடு அதிகரித்தன. ஆகஸ்ட்டில் ஏற்றுமதிகள் 13.3 விழுக்காடு சரிந்திருந்தன.

மாதந்தோறும் பதிவாகும் எண்ணெய் சாரா ஏற்றுமதி விகிதம் பெரிய அளவில் மாற்றம் காணும் ஆற்றலை தற்போது கொண்டுள்ளது. இது, உலகப் பொருளியல், வர்த்தகச் சூழல் வெகு விரைவில் மாறுவதை எடுத்துக்காட்டுவதாக ஒசிபிசி வங்கியின் தலைமை பொருளியல் வல்லுநர் செலானா லிங் குறிப்பிட்டார்.

ஹாங்காங், தைவான், சீனாவுக்கான முக்கிய ஏற்றுமதிகள் செப்டம்பரில் அதிகரித்தன. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தோனீசியா ஆகியவற்றுக்கான ஏற்றுமதிகள் குறைந்தன.

அமெரிக்காவுக்கும் சினாவுக்கும் இடையே மறுபடியும் வர்த்தகப் பூசல் நிலவுவதால் மேலும் இடையூறுகளையும் சவால்களையும் எதிர்நோக்க சிங்கப்பூர் தயாராய் இருக்கவேண்டும் என்று அவர் விளக்கமளித்தார்.

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதிகள் 20.5 விழுக்காடு சரிந்தன. ஆகஸ்ட்டில் அவ்வட்டாரத்துக்கான ஏற்றுமதிகள் 29 விழுக்காடு அதிகரித்திருந்தன.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் 9.9 விழுக்காடு குறைந்தன. ஆகஸ்ட்டில் பதிவான 29.1 விழுக்காட்டுச் சரிவுடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் ஏற்றுமதிகள் குறைவான விகிதத்தில் சரிந்தன.

குறிப்புச் சொற்கள்