எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பான சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்துச் சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது. சட்ட அமலாக்க நடைமுறையில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் காட்டுத்தீச் சம்பவங்களுக்குக் காரணமான நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் இதன் முக்கிய நோக்கம்.
நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) இதனைத் தெரிவித்தார். சிங்கப்பூர்ச் சுற்றுப்புற மன்றம் ஏற்பாடு செய்திருந்த நீடித்த நிலைத்தன்மைக் கொள்முதல் தொடர்பான நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
சிங்கப்பூரின் எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இரண்டு சவால்கள் இருப்பதாகத் திருவாட்டி ஃபூ கூறினார்.
சான்றுகளைத் திரட்டுவதும் சிங்கப்பூருக்கு வெளியே செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறுவதுமே அந்தச் சவால்கள் என்றார் அவர்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஒத்துழைக்க மறுத்தாலோ அந்நிறுவன அதிகாரிகள் எவரும் சிங்கப்பூருக்குள் நுழையாவிட்டாலோ சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினமாகிறது என்று அமைச்சர் கூறினார்.
அதேபோல, எல்லை கடந்து சென்று சான்றுகளைத் திரட்டுவதும் அவற்றை அதிகாரபூர்வமாகச் சரிபார்ப்பதும் சவாலான காரியமாகும் என்று அவர் சொன்னார். நிறுவனங்களின் நில உரிமை, நிறுவனங்களுக்கு இடையிலான செயல்பாட்டுத் தொடர்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதும் எளிதன்று.
நடப்புப் புகைமூட்டச் சூழல் தொடர்பில் சிங்கப்பூரையும் இந்தோனீசியாவையும் சேர்ந்த கிட்டத்தட்ட 20 நிறுவனங்களுக்குச் சட்டபூர்வ அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
காட்டுத்தீக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தோனீசியாவின் 10 நிறுவனங்களுக்குப் பிரிவு 9ன்கீழ் அறிக்கைகள் விடுக்கப்பட்டன.
மேலும், புலன்விசாரணைக்குத் தேவையான தகவல்களைத் தருமாறு சிங்கப்பூரில் பதிவுசெய்துள்ள 10 நிறுவனங்களுக்குச் சட்டப் பிரிவு10ன்கீழ் அறிக்கைகள் அனுப்பப்பட்டன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், நிறுவனக் கட்டமைப்பு, விநியோக நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுமையாக ஆராயச் சட்ட, புலனாய்வு, கணக்காய்வு நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அரசாங்கம் அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய சட்டத்தை எந்த அளவுக்குத் திறம்படச் செயல்படுத்த முடியும் என்பதை அரசாங்கம் மறுஆய்வு செய்துவருவதாக அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.
தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யப்படலாம் அல்லது புதிய சட்டங்கள் இயற்றப்படலாம் என்றார் அவர். அத்துடன் வர்த்தக ஒழுங்குமுறை, பொருளியல் ரீதியிலான மற்ற தீர்வுகளும் விரிவாக ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொறுப்பான சுற்றுச்சூழல் நடைமுறைகளை நிறுவனங்கள் வெளிப்படையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலீட்டாளர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.
