‘பிக்கல்பால்’ விளையாட்டால் தூக்கம் கெட்டது: குடியிருப்பாளர் குமுறல்

‘பிக்கல்பால்’ விளையாட்டால் தூக்கம் கெட்டது: குடியிருப்பாளர் குமுறல்

2 mins read
பிக்கல்பால் சத்தத்தைக் கட்டுப்படுத்த பல பகுதிகளிலும் உள்ள நகர மன்றங்கள் நேரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன
a4066494-ed84-4f6f-83b1-c0741d2f43c7
கிளமெண்டியில் வசிக்கும் அந்தக் குடியிருப்பாளர், காலை 8 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை தொடரும் பிக்கல்பால் விளையாட்டின் சத்தம் தூக்கத்தை கலைத்துவிடுகிறது என்று குறைபட்டுக்கொண்டார். - படம்: மதர்ஷிப் இணைய ஊடகம்
Watch on YouTube
Watch on YouTube

சிங்கப்பூரில் கடந்த 2025ஆம் ஆண்டுமுதல் பிரபலமாகி வரும் பிக்கல்பால் விளையாட்டு, சிலருக்கு தொல்லையை ஏற்படுத்தி உள்ளது.

அவ்விளையாட்டால் பாதிப்படைந்த குடியிருப்பாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன.

அந்த வரிசையில் கிளமெண்டியில் வாழும் ஒரு குடியிருப்பாளர், இவ்வாண்டு மார்ச் மாத மத்தியில் தமது வீட்டின்கீழ்தளத்தில் விளையாடப்பட்ட பிக்கல்பால் விளையாட்டு அவரது தூக்கத்தைக் கெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 14ஆம் தேதி இரண்டாம் மாடியில் வசிக்கும் அந்த மாதின் வீட்டின்கீழ் ஒன்றுகூடி சிலர் பிக்கல்பால் விளையாடியுள்ளனர். அவர்களும் அவ்விளையாட்டில் பயன்படும் பந்தும் மட்டையும் ஏற்படுத்தியச் சத்தம், அம்மாதின் வார இறுதித் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது.

“அந்த சத்தத்தால் எனக்குப் பைத்தியம் பிடிப்பதுபோல் ஆனது. எனவே நான் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் எதற்கு என் வீட்டை விட்டு நான் செல்லவேண்டும். எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சொந்த வீட்டில் என்னால் இருக்கமுடியவில்லையே,” என்று அவர் வேதனைப் பட்டார்.

பொதுவாகக் காலை 8 மணிக்குத் தொடங்கி ஆட்டம் முற்பகல் 11 மணிக்கு முடிகிறது. அவர் மட்டுமல்லாது மற்ற குடியிருப்பாளர்களும் அவ்விளையாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாது பகிர்ந்துகொண்டார்.

நகர மன்றத்துக்குப் புகார் அளித்தும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை எனவும் மாது குறிப்பிட்டார். விளையாட்டு மைதானத்தில் சத்தக் கட்டுப்பாடு பற்றி நகர மன்றத்தின் அறிவிப்புப் பதாகை இருப்பதையும் அந்த மாது சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுக்கு தாம் எதிரி இல்லை என்றாலும் அது ஏற்படுத்தும் சத்தம் நிம்மதியைக் கெடுக்கின்றது என்று மனம் வருந்தினார் அந்த மாது.

பிக்கல்பால் விளையாட்டு ஏற்படுத்தும் சத்தத்தைக் கட்டுப்படுத்த தீவின் பல பகுதிகளிலும் நகர மன்றங்கள் நேரக் கட்டுப்பாடு போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

குறிப்புச் சொற்கள்